பிரித்தானியாவின் புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) பதவியேற்றவுடன் இந்தியாவிற்கு வருகை தருமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) அழைப்பு விடுத்துள்ளார்.
பிரித்தானியப் பிரதமருடனான தொலைபேசி உரையாடலில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ,ந்தியப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உறுதிப்பாடு
அதன் போது, பிரித்தானிய பிரதமராக பதவியேற்ற கெய்ர் ஸ்டார்மருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இரு தலைவர்களும் இந்தியா- பிரித்தானியாவின் விரிவான மூலோபாய கூட்டாண்மையை ஆழப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நேர்மறையான பங்களிப்பு
அத்துடன், பிரித்தானியாவின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் வளர்ச்சிக்கு இந்திய சமூகத்தின் நேர்மறையான பங்களிப்பைப் பாராட்டி, இரு தரப்பினரும் மக்களிடையே நெருக்கமான உறவுகளை மேம்படுத்த ஒப்புக்கொண்டுள்ளனர்.
மேலும், இரு நாடுகளும் பொருளாதார உறவை ஆழப்படுத்துவதில் உறுதியாக உள்ளதாக பிரதமர் மோடி பிரித்தானிய பிரதமரிடம் கூறியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.