இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் இலங்கையிலே தமிழ் தேசிய பிரச்சினைக்கான தீர்வு இருக்க முடியும் என்பதை நாங்கள் நம்புகின்றோம் என்று தமிழரசுக்கட்சி பதில் பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பிரதமரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை-இந்திய ஒப்பந்தம்
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“ஒரு அர்த்தமுள்ள அதிகார பகிர்வு முறை ஏற்படுத்த பட வேண்டும்.
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதிலே பல குறைபாடுகள் காணப்படுகின்றன.
13ஆம் திருத்தம் கூட நடைமுறைப்படுத்தவில்லை.
இது இரண்டு அரசாங்கங்களும் ஏற்றுக்கொண்ட ஒரு விடயம்.
ஏனென்றால் 2010, 2011, 2012 ஆம் ஆண்டுகளில் மூன்றுதடவைகள் இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையில் விடுக்கப்பட்ட கூட்டறிக்கைகளில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதன் மேல் கட்டியெழுப்பி ஒரு அர்த்தமுள்ள அதிகார பகிர்வை உருவாக்குவோம் என கூறப்பட்டுள்ளது.
அது இன்னமும் செய்யப்படவில்லை.
அதிகார பகிர்வு
புதிய அரசியலமைப்பினூடாகவோ அல்லது வேறு விதமாகவோ இலங்கை- இந்திய ஒப்பந்ததின் அடிப்படையிலே ஒரு அர்த்தமுள்ள அதிகார பகிர்வு ஏற்படுத்த பட வேண்டும்.

நாங்கள் சமஸ்டி கட்சியாக உள்ளமையினால் இந்த அர்த்தமுள்ள அதிகார பகிர்வு சமஸ்டி முறையில் இருக்குமென்று நம்புகின்றோம்.
அந்த இலக்கை அடையயும் வரை இதுவரையில் உள்ள மாகாணசபை முறைமை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
மாகாணசபைக்கான தேர்தல்கள் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றது.
அது உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்
இந்தியா மட்டும் தான் இலங்கை தமிழர் விவகாரத்தில் எப்படியான தீர்வு ஏற்படத்தப்பட வேண்டும் என்பதை இலங்கை அரசாங்கத்துடன் இணங்கி ஒரு சர்வதேச ஒப்பந்தமும் நடைமுறையில் இருக்கின்றது.
அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய பாரம் இந்தியாவிடம் தங்கியுள்ளது” என குறிப்பிட்டார்.

