ஊழலற்ற அரசாங்கம் வேண்டும், ஊழலற்ற அதிகாரிகள் வேண்டும் ஆனால் நீங்கள் நன்மை
பெற அவர்கள் தவறு செய்தால் அது மக்களின் நலன் என்ற நிலையிலேயே எம் சமூகம்
காணப்படுகின்றது என கிராம சேவையாளர் ஒருவர் தனது ஆதங்கத்தை
வெளிப்படுத்தியுள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நான் ஒரு கிராம உத்தியோகத்தராக கடமையை பொருப்பேற்ற பின் கொரோனா , வெள்ள
அனர்த்தம், வறட்சி, பொருளாதார நெருக்கடி என பல்வேறுபட்ட அனர்த்த காலங்களை
கடந்து வந்துள்ளேன்.
தற்போது இந்த மாபெரும் இயற்கைப் பேரிடர். ஏனைய அனர்த்தங்களை விட இது எமது
பிரதேசத்தில் ஒப்பீட்டளவில் மிகக் குறைவான பாதிப்பையே ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் இம்முறை எமது பிரதேசத்தில் அனர்த்த முன்னாயத்த ஏற்பாடுகள் ஓரளவு
நன்றாக மேற்கொள்ளப்பட்டமையாலும் வடிகான்கள் துப்பரவு செய்யப்பட்டமையாலும்
வெள்ள நீர் தேங்குவது குறைவாக காணப்பட்டதுடன் அவசர நிலைமைகளின் போது பொறுப்பான
அரச உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்
உடனடியாக களத்திற்கு சென்று நிலைமைகளை சீர் படுத்தினர்.
இவை முந்தைய காலங்களை
விட மிக சிறப்பான முன்னேற்றமாகும்.
இருப்பினும் ஒன்று மட்டும் மாறவில்லை “நட்ட ஈடு கோரல்”
அரசாங்கம் பல்வேறுபட்ட நட்ட ஈடுகளை வழங்குவதற்கு அறிவித்துள்ளது. ஆனாலும்
உண்மையாக அதன் சுற்றறிக்கையின் வரையறைக்குள் பார்க்கின்ற போது வெகுசிலரே
அதற்குத் தகுதியானவர்கள்.
ஆனால் தினமும் நாங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய
சவாலாக எல்லோரும் தங்களுக்கு நட்ட ஈடுகளை வழங்குமாறு கோருகின்றனர்.
மனசாட்சி
எம்மிடம் கொஞ்சமாவது மீதமுள்ளதா?
அன்பான உறவுகளை இழந்து , இத்தனை வருடங்கள் உழைத்த சொத்துகள் வீடுகள் எல்லாம்
இழந்து , உண்ண உணவின்றி, குடிநீர் இன்றி, வெறும் கையோடு பூச்சியமாக நிற்கும்
எம் சகோதரர்களுக்கு மத்தியில் உங்களுடைய இழப்பு என்ன?
வீதிகள் , பாலங்கள் ,
கட்டிடங்கள், மின்சாரம் , தொலைத்தொடர்பு என எல்லா உட்கட்டமைப்பு வசதிகளும்
நொருங்கிப் போயுள்ள எம் நாட்டை அரசாங்கம் எவ்வாறு மீட்டுக்கொண்டுவரப்போகிறது ?
இத்தனைக்கும் நடுவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும் வழங்குகிறது, அது
அத்தியாவசியமானது , உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு ஊன்று கோலாக
அமையும்.
இச்சந்தர்ப்பத்தில் குடிமக்களாகிய நாம் அரசின் நிதியை இஸ்திரப்படுத்த
தவறினால் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியின் பால் எம் அழகிய நாடு செல்வதை
தடுக்க முடியாது.
எனவே ஒவ்வொருவரும் எங்களுக்கு எதற்கு அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும்? நான்
எந்த வகையில் தகுதியானவர் என சிந்தியுங்கள்.
அரசாங்கம் தருகின்றதென்றால் அது எதுவாயினும் எனக்கும் வேண்டும் என்ற மனோநிலையை
எப்போது எம் சமூகம் மாற்றிக் கொள்ளப் போகிறது.
ஊழலற்ற அரசாங்கம் வேண்டும், ஊழலற்ற அதிகாரிகள் வேண்டும் ஆனால் நீங்கள் நன்மை
பெற அவர்கள் தவறு செய்தால் அது மக்களின் நலன் என்ற நிலையிலேயே எம் சமூகம்
காணப்படுகின்றது.
எனக்கு இழப்பீடு தருவதால் என்ன குறைந்து விடப்போகிறது என நினைக்காதீர்கள்.
சிறுதுளி பெருவெள்ளம் என்பதை மறக்காதீர்கள்.
எனவே
“வேண்டாம்…. இந்த இழப்பீடு”
நிவாரணப்பொருட்கள் சேகரித்து அனுப்பினால் மாத்திரம் எம் நாட்டை மீட்டுக்
கொண்டு வர முடியாது.
அரசின் இழப்பீடுகளுக்கு உங்களை பொருத்தமற்றவர்களாக
தார்மீகமாக இணைத்துகொள்ளுங்கள் , உண்மையில் பாதிக்கப்பட்டவர்களை சென்றடைந்து
அவர்களும் வாழட்டும். அரச உத்தியோகத்தர்களாகிய எங்களை நேர்மையாக செயற்பட
விடுங்கள்.

