மழை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக கடந்த காலங்களில் ஏற்பட்ட பயிர்ச்செய்கை பாதிப்புக்கான நஷ்டஈடுகளை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் விவசாய, கால்நடை வளங்கள்,காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று (06.03.2025) நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவு திட்ட யோசனை
2025 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட யோசனையினூடாக விவசாய, கால்நடை வளங்கள்,காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் மற்றும் அந்த ஒதுக்கீடுகளை உரிய வேலைத்திட்டங்களுக்காக பயன்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
விவசாய தரவுகளில் காணப்படும் முழுமையற்ற தன்மையின் காரணமாக மேற்கொள்ளப்பட்ட சில தீர்மானங்களில் தவறு ஏற்பட்டதையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
விவசாய உற்பத்திகளுக்கு சந்தையில் நியாயமான விலையைப் பெற்றுக்கொடுப்பதுடன் விவசாயிகளின் பாதுகாப்பைப் போலவே நுகர்வோருக்கும் நியாயமான வகையில் விலைகளை நிர்ணயிக்க வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் ,கால்நடை வளங்கள் துறையின் முன்னேற்றத்திற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், ஏற்றுமதி விவசாய பயிர்கள் உக்குவிப்பு, மில்கோ நிறுவனத்தின் முன்னெடுப்பு மற்றும் அதன் முன்னேற்றம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.