2020 ஆம் ஆண்டு கட்சியொன்றின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற பதவிக்காக அக்கட்சியின் பொதுச் செயலாளரை கடத்திய குற்றச்சாட்டில் அதுரலிய ரத்தன தேரரை கைது செய்வதற்காக, கொழும்பு குற்றப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சென்ற போது அவர் தலைமறைவாகியுள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த 7 ஆம் திகதி அவர் இருந்த ராஜகிரியவில் உள்ள சந்தன சேவன விகாரையை அதிகாரிகள் அடைந்த போது, ரத்தன தேரர் அங்கு இல்லை என்றும், தேரர் தனது தொலைப்பேசியையும் அணைத்துவிட்டு மறைந்திருந்ததாகவும் கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
கோட்டாபய – தேசபந்துவிடம் விசாரணை
இந்த விசாரணைகள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரையும் எதிர்காலத்தில் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான முறைப்பாட்டில், இந்தக் கடத்தலுக்கும், தேசபந்து தென்னகோனுக்கும் தேசியப் பட்டியல் எம்.பி. பதவியைப் பெறுவதில் உள்ள சதிக்கும் தொடர்பு இருப்பதாக தெளிவாகக் கூறப்பட்டுள்ளது என்று கொழும்பு குற்றப்பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், முதல் சந்தேக நபர் ஜூலை 20 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 35 வயதான கட்டுவன கிரிமநாகொட பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அவர் கண்டலம நந்தசீஹ தேரர் என்ற பெயரில் துறவறம் பெற்று பின்னர் துறவியாகியுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பெலியத்த துப்பாக்கிச் சூடு
முறைப்பாட்டில் பாதிக்கப்பட்டவர், அவர் கடத்தப்பட்டு பல ஆவணங்களில் கையொப்பமிட கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், அதன் மூலம் குறித்த கட்சிக்கு சொந்தமான தேசிய பட்டியல் எம்.பி. பதவி அதுரலிய ரத்தன தேரருக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் தொலைபேசி இணைப்புகளை பகுப்பாய்வு செய்ததில், கடத்தப்பட்டதிலிருந்து ரத்தன தேரருக்கும் சந்தேக நபர்களுக்கும் இடையே அதிகளவிலான தொலைபேசி உரையாடல்கள் நடந்திருப்பதையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இதேவேளை, கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி 22 அன்று பெலியத்த அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில், சம்பந்தப்பட்ட கட்சியின் தலைவராகப் பணியாற்றியவர் உட்பட ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.