Courtesy: H A Roshan
திருகோணமலை மாவட்டம், குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திரியாய் பகுதியில் cள்ள தனியார் விவசாய காணிக்குள் பௌத்த பிக்கு ஒருவர் தொடர்ந்து அடாவடித்தனம் செய்து வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தங்களுக்கு சொந்தமான காணிக்குள் விவசாய பெரும்போக நெற் செய்கைக்கான இயந்திரம் மூலமான உழுதல் நடவடிக்கையின் போது காணிக்குள் புகுந்த பௌத்த பிக்கு, அட்டகாசம் ஏற்படுத்தியதாக புல்மோட்டையை சேர்ந்த ஜெ.புஹாரி தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பௌத்த சங்கத்தின் தலைவர்
இது தொடர்பில் மேலும் தெரிவிப்பதாவது “வளத்ணாமலை பகுதியில் காலம் காலமாக எங்கள் விவசாய காணியில் விவசாயம் செய்து வந்தோம்.
தற்போது பௌத்த பிக்கு பெரும்போகச் செய்கைக்காக உழுதலை மேற்கொள்ளும் போது தடுத்து நிறுத்தினார்.
இம்முறை குத்தகைக்கு எனது சிறிய தந்தைக்கு காணியை வழங்கியிருந்தேன். இருந்த போதிலும் பௌத்த பிக்குவின் அட்டகாசம் காரணமாக 119 பொலிஸ் தொலைபேசி இலக்கத்துக்கு முறைப்பாடு செய்த போது அதனை மீறியும் தடையை ஏற்படுத்தி வருகிறார்.இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது ” என்றார்.
புனித பூமி என்ற போர்வையில் விவசாய காணிகளை தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தம் என பல ஏக்கர்களை அடாத்தாக அபகரிப்புச் செய்யும் அரிசி மலை திரியாய் பௌத்த பிக்குவான பாணமுறே திலகவன்ச தேரர் கடந்த கோத்தாபயவின் ஆட்சி காலத்தில் ஜனாதிபதியின் கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணியின் உறுப்பினராக செயற்பட்டு வந்தவர் மட்டுமல்லாது வடகிழக்கு பௌத்த சங்கத்தின் தலைவர் எனவும் தெரிய வருகிறது.
இந்நிலையில், அரசாங்கத்தினால் இவருக்கு மெய்ப்பாதுகாவலரும் (MSD) வழங்கப்பட்டுள்ளது.
பௌத்த பிக்குவுக்கு மாத்திரம் ஏன் பாதுகாப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சியின் பின் அதிரடியாக முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு நீக்கப்பட்ட போதும் இவ்வாறு பௌத்த பிக்குவுக்கு மாத்திரம் ஏன் பாதுகாப்பு வழங்கப்படுகிறது என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
திரியாய்க் கிராமத்தின் பூர்விக
வயல் நிலங்களில் முக்கிய வயல் வெளிகளான
வளத்தாமரை ,ஆதிக்காடு, ஒட்டுப்புல்மோட்டை, நீராவிக்கண்டல் ,வேடன்குளம் என உள்ளடக்கிய வயல் வெளிகளில் மக்கள் பரம்பரை பரம்பரையாக வயற்செய்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், புல்மோட்டை அரிசிமலைப் பிக்குவினால் அடாவடியாக கையகப்படுத்தப்பட்ட 88 ஏக்கர் பொதுமக்களின் உறுதிக் காணியில் விவசாயம் மேற்கொள்ள பாரிய சிரமத்தை மக்கள் எதிர்கொள்கின்றனர்.
இக்காணிக்கள் அனைத்துமே உறுதிக்காணிகள் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
வருடா வருடம் பெரும் போக வயற்செய்கையின் போதும் இவ்விதமான நெருக்கடிகளை மக்கள் எதிர்கொள்வதும் பின் பிக்குவின் அடாவடியினால் பயந்து இருப்பதுமான அவல நிலையில் மக்கள் இருக்கின்றனர்.
நீதிமன்றினால் மக்களிடம் காணிகளை கையகப்படுத்தக் கோரியும் பிக்கு அடாவடியான முறையில் இச்செய்யற்பாட்டை முன் எடுப்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
விவசாயிகளுக்கு கடுமையான அச்சுறுத்தல்
பூர்விக வயல் நிலங்களில் ஒன்றான வளத்தாமலையடி, ஆதிக்காடு, வேடன் குளம் போன்ற 880 ஏக்கர்
விஸ்தீரனமுடைய 125 வருடப் பழமை வாய்ந்த ஆங்கிலேயர் காலத்து உறுதி உடைய காணிகள் ஆகும்.
1985ம் ஆண்டு வரை அந்நிலங்களில் வயற்செய்கை மேற்கொண்டு வந்த நிலையில்
1985ம் ஆண்டு இனக்கலவரத்தின் போது மக்கள்
பல்வேறு மாவட்டங்களிற்கு இடம்பெயர்ந்தனர்.
தொடர்ந்து 1990ம் ஆண்டு மீண்டும் மக்கள் வந்து இக்காணிகளில் மானாவாரி நெற் செய்கையை செய்தனர்.
தொடர்ந்தும் ஏற்பட்ட இனக்கலவரத்தினைத் தொடர்ந்து 2002ம் ஆண்டு மீண்டும் தமது சொந்த நிலங்களுக்கு மீளக்குடியமர்த்தப்பட்டனர்.
இருந்த போதும் போரினால் வாழ்வாதாரங்களை இழந்த விவசாயிகள் 2020ம் ஆண்டு மீண்டும் தமது வயல் நிலங்களில் வயற்செய்கை மேற்கொள்ளச் சென்ற
வேளை புல்மோட்டை அரிசி மலைப் பிக்குவினால் மக்களின் அனைத்துக் காணிகளும் அடாவடியான முறையில் கையகப்படுத்தப்பட்டு விவசாயிகளுக்கு கடுமையான அச்சுறுத்தல்களையும் மேற்கொண்டு வந்தார்.
காணி அளவீடு தடுத்து நிறுத்தப்பட்டது
2022ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் மக்களின் காணிகளை மக்களிடம் கையகப்படுத்த உத்தரவு பிறபித்த போதும் தொடர்ந்தும் அடாவடியான முறையில் பிக்கு செயற்பட்டு வந்த நிலையில் கடந்த 05.09.2024ம் ஆண்டு விவசாய நடவடிக்கையில் ஏற்பட்ட விவசாயிகளை தடுத்து நிறுத்தி மீண்டும் பிக்கு தனது அடாவடியை தொடர்ந்தார்.
உடனடியாக இப்பிணக்கு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரிடம் தெரியப்படுத்தப்பட்டு கடந்த 07.09.2024 ம் திகதி மாலை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், பிக்கு உட்பட காணி உரிமையாளர்கள் அனைவரையும் அழைத்து முழுமையான விசாரணைக்குப் பிறகு உரிய ஆவணங்கள் உள்ள விவசாயிகள் உடனடியாக வயற்செய்கையில் ஈடுபடுமாறு அனுமதி வழங்கினார்.
இதைத் தொடர்ந்து 2024.09.10ஆந் திகதி குச்சவெளி கமநல சேவைத் திணைக்கள அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் 2024ம் ஆண்டுக்கான பெரும்போக வயற் செய்கைக்காக மக்கள் தங்கள் காணிகள் அளவீடு செய்யச் சென்ற வேளை, குறித்த காணிகளில் அளவீடு செய்ய விடாது தடுத்துள்ளார்.
எனினும், புல்மோட்டை பொலிஸ் உயர் அதிகாரி சம்பவ இடத்துக்கு வருகை தந்து மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை குச்சவெளி பிரதேச செயலகத்துக்கு அனைத்து விவசாயிகளையும் உரிய ஆவணங்களுடன் வருகை தருமாறு பணித்தனர்.
இந்நிலையில் காணி அளவீடு தடுத்து நிறுத்தப்பட்டது.
இவ்வாறாக கடந்த தினத்தில் புல்மோட்டையினைச் சேர்ந்த ஜெயினுலாப்தீன் புகாரி என்பவரின் உறுதிக் காணிக்குள் அடாவடியாக வயற் செய்கை மேற்கொள்ள முயன்ற குறித்த பிக்குவின் செயற்பாட்டால் மேற்கொள்ளப்பட்ட அவசர நடவடிக்கைகளினால் 2024.09.07 அனைத்தும் விவசாயிகளும் திருகோணமலை மாவட்டச் செயலகத்துக்கு அழைக்கப்பட்டனர்.
விவசாயிகளினால் தகுந்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் உடனடியாக விவசாயிகளின் காணிகளை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்குமாறு மாவட்டச் செயலாளர் உத்தரவு பிறப்பித்தார்.
அரச பாதுகாப்பு வழங்கப்பட்ட மெய்பாதுகாவலர்கள்
இவ்வாறாக புனித பூமி என அடையாளப்படுத்தி அரச பாதுகாப்பு வழங்கப்பட்ட மெய்பாதுகாவலர்களுடன் அத்துமீறி அப்பாவி மக்களை அச்சுறுத்தி நெற் செய்கை காணிகளை விவசாயம் செய்யவிடாது அடாத்தாக தடுத்து நிறுத்துகின்றனர்.
கடந்த நல்லாட்சி அரசாங்கம் தொடக்கம் அதிகளவான காணி அபகரிப்பு இடம்பெற்ற மாவட்டமாக திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவு காணப்படுவதாகவும் இப்பகுதியில் 3887 ஏக்கர் தனியார் நிலங்கள் அபகரிக்கப்பட்டு 26 விகாரைகள் கட்டுமாணப்பணிக்காக ஒதுக்கப்பட்டதாகவும் அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் காணி ஆராய்ச்சியில் ஈடுபடும் ஓக்லேன்ட்(The Oakland Insitute) நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
குறித்த அரிசிமலை திரியாய் பகுதிக்கு 2010ம் ஆண்டு அம்பாந்தோட்டையில் இருந்து வருகை தந்த பிக்குவினால் புனித பூமி என கூறி பல நில அபகரிப்புக்கள் இடம்பெற்றுள்ளதுடன் பெரும்பான்மை இன குடியேற்றத் திட்டத்தையும் மேற்கொண்டுள்ளார்.
மக்கள் விவசாய காணிக்குள் நெற் செய்கை செய்ய விடாது தடுத்து நிறுத்திய சப்தநாக விகாரையின் விகாராதிபதி அத்து மீறி மீண்டும் உழுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது
இது தொடர்பில் குச்சவெளி பொலிஸில் முறைப்பாடளித்த ஜெ.புஹாரி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
சரியான நிரந்தர தீர்வு
சட்ட ரீதியான ஆவணங்கள் இருந்த போதும் தங்களது காணிகளில் விவசாய செய்கையில் ஈடுபடாது வாழ்வாதாரத்தை நாசப்படுத்தும் பௌத்த பிக்குகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்காமை குறித்து தாங்கள் கவலையடைவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
சிறுபான்மை மக்களின் காணிகள் இவ்வாறே வடகிழக்கில் அபகரிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.
தற்போதைய அரசாங்கம் பல அதிரடியான நல்ல பல விடயங்களை நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் செய்வதாக கூறுகின்ற போதிலும் இப்படியான அப்பாவி மக்களின் உரிமைகள் விடயத்தில் அதிக அக்கறை கொண்டு உரியவர்களின் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு விவசாய செய்கையில் ஈடுபட ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
பௌத்த துறவிகளுக்கு ஒரு சட்டம் சாதாரண பொது மகனுக்கு ஒரு சட்டமா எனவும் குறித்த விவசாயிகள் அங்கலாய்க்கின்றனர்.
விவசாயத்தை நம்பி வாழும் இம்மக்களின் வாழ்வாதாரமே நெற்செய்கையாகும்.
இருந்த போதிலும் நில அபகரிப்புக்களை மேற்கொள்வதால் ஜீவனோபாயம் பாதிக்கப்படுகிறது.
எனவே தான் தற்போதைய அரசாங்கம் இம்மக்களுக்கு சரியான நிரந்தர தீர்வை வழங்க முன்வரவேண்டும் என்பதே பெரும் எதிர்பார்ப்பாக காணப்படுகிறது.