இலங்கையில் பொலிஸார் மத்தியில் தொற்றா நோய்கள் அதிகரித்து வருவதால், அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலும் கட்டாயமாக உடல் பயிற்சிப் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று பதில் பொலிஸ் அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவிட்டுள்ளார்
பொலிஸாருக்கு மாலையில் கைப்பந்து போன்ற குழு விளையாட்டுகளை மேற்கொள்ளவேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
உடல் பராமரிப்பில் அதிக கவனம்
பொலிஸார் மத்தியில் ஒப்பீட்டளவில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் ஏற்பட்டுள்ளதை அடுத்தே இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில், கிட்டத்தட்ட 250 பொலிஸ் அதிகாரிகள் தொற்றா நோய்களால் பலியாகினர்,
அதே நேரத்தில் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் இந்த எண்ணிக்கை 200 ஐத் தாண்டியுள்ளது.
இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சினைகள், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவை காரணமாகவே இந்த இறப்புக்கள் நிகழ்ந்துள்ளன.
பொலிஸ் அதிகாரிகள் பெரும்பாலும் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுவதால், சரியான நேரத்தில் ஓய்வெடுக்கவோ அல்லது உணவை உட்கொள்ளவோ முடியாமல், அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.
எனினும் அவர்கள் தமது உடல் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்று கோரப்பட்டுள்ளனர்.