Courtesy: uky(ஊகி)
முல்லைத்தீவு – துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தமிழ்மொழி புறக்கணிப்புச் செயற்பாடு நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இப்பாடசாலையின் 90ஆம் ஆண்டு நிறைவு நாளை ஒட்டி நடைபெற்ற விழாவில் மொழி அவமதிப்புச் செயற்பாடு நடைபெற்றுள்ளதாக தமிழ் மொழி ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தமிழ் மொழி மூலப் பாடசாலையாக, தமிழ்க்கிராமம் ஒன்றில் உள்ள அப்பாடசாலையானது தன் பெயரைக் கூட சரியாக எழுத்துப்பிழை இல்லாது எழுதிக் கொள்ள முடியாததாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
பெயரில் ஏற்பட்ட பிழை
துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட கற்சிலைமடு பண்டாரவன்னியன் மகாவித்தியாலயத்தில் அதன் 90ஆம் ஆண்டு நிறைவு விழா அண்மையில் நடைபெற்றிருந்தது.
அந்த விழாவின் அலங்கரிக்கப்பட்ட மேடையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பாடசாலையின் பெயர் தவறாக இருந்தது அங்கு கூடியிருந்த தமிழார்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
“பண்டார வன்னியன்” என வரவேண்டிய இடத்தில் பண்டர வன்னியன் என ” டா” வரவேண்டிய இடத்தில் “ட ” என்ற எழுத்து இடப்பட்டிருந்தது.
நெட்டெழுத்தில் வரவேண்டிய பெயர் குற்றெழுத்தில் எழுதப்பட்டுள்ளது. எழுத்துப் பிழையோடு பெயரை எழுதுதல் மொழித்தவறு மட்டுமல்ல, அந்த மொழியை அவமதிப்பதாகவே கொள்ள வேண்டும் என நிகழ்வு தொடர்பில் தமிழார்வலரும் பாடசாலை ஒன்றின் அதிபருமாக உள்ள தமிழார்வலர் தன் ஆதங்கத்தினை வெளிப்படுத்தி இருந்தார்.
நிறைவு விழாவில் தவறு
90ஆம் ஆண்டு நிறைவு விழாவும் பரிசளிப்பு விழாவும் என குறிப்பிட்டு காட்சிப்படுத்த வேண்டிய இடத்தில் 90ஆம் ஆண்டு நினைவு விழாவும் பரிசளிப்பு விழாவும் என குறிக்கப்பட்டிருந்தது.
இது பொருட்பிழையைக் கொண்டுள்ளதாக தமிழார்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கற்சிலைமடு பண்டார வன்னியன் மகாவித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டு 90 ஆண்டுகள் நிறைவுற்றதை முன்னிட்டு இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு பரிசளிப்பு விழாவாகவும் அது அமையும் படி விரிவாக்கப்பட்டு இருந்தது.
அப்படி இருக்கும் போது 90ஆம் ஆண்டு நினைவு விழா என்பது அமங்களமான உணர்வை ஏற்படுத்தி விடும். நிறைவு விழா என்பதே பொருத்தப்பாடாக இருக்கும் என அவர்கள் மேலும் தங்கள் வாதத்தினை முன்வைத்திருந்தனர்.
அத்துடன், நிகழ்ச்சி ஒழுங்கு முறைகளிலும் வழமைக்கு மாறான அணுகல் இருப்பதாகவும் அவர்கள் தொடர்ந்தும் தங்கள் அதிருப்தியை வெளியிடுகின்றனர்.
கவனிக்கப்படாத சுட்டிக்காட்டல்
அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த மேற்படி தமிழார்வலர் எழுத்துத் தவறு தொடர்பில் நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவில் உள்ள ஆசிரியை ஒருவரின் கவனத்திற்கு கொண்டு வந்த போதும் அது தொடர்பில் அவர்கள் அக்கறை கொண்டதாக தெரியவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.
மேடையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிகழ்வு குறித்த அறிவிப்பில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டிய பின்னரும் சீர் செய்யவோ அல்லது பிழையாக உள்ள அதனை அகற்றவோ இறுதிவரை முயற்சிக்கவில்லை என்பதும் நோக்கத்தக்கது.
பொலனறுவையில் நடைபெற்றிருந்த ஒரு தொல்பொருட்கள் தொடர்பான கண்காட்சியொன்றில் தமிழ் மொழியில் எழுதப்பட்டவற்றில் சில எழுத்துப் பிழையோடு இருந்ததை தனது குழுவினர் அவதானித்தனர்.
அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் தொடர்பு கொண்டு குறித்த எழுத்துத் தவறின் தார்பரியத்தினை எடுத்துரைத்து இருந்தனர்.அதன் விளைவாக உடனடியாகவே அவை திருத்தி எழுதி வைக்கப்படுவதற்கு அவர்கள் நடவடிக்கைகள் எடுத்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
முல்லைத்தீவில் உள்ள கற்சிலைமடு பண்டாரவன்னியன் மகாவித்தியாலயத்தில் இது போல் அவதானிக்கப்பட்ட எழுத்துத் தவறினை சுட்டிக்காட்டிய போதும் அவர்கள் அக்கறை கொள்ளாதது தனக்கு வருத்தமளிப்பதோடு மொழி அவமதிப்பை அவர்கள் செய்வதாக அவர்கள் மீது கோபம் ஏற்படுவதாகவும் அவர் மேலும் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்படவுள்ள பாரிய விளைவுகள்
தமிழர் பகுதியில் அதிகளவில் மக்களை கூட்டி நடத்தப்பட்ட ஒரு கலை, கலாசார அம்சங்களை வெளிக்காட்டும் ஆண்டு நிறைவு விழாவில்; அதுவும் ஒரு பாடசாலையின் ஆண்டு நிறைவு விழாவில்; இப்பாடசாலையின் பெயரில் ஏற்பட்ட எழுத்துத் தவறினை கண்டுகொள்ளாதது தவறாக நடந்ததா?
அல்லது, வேண்டுமென்றே தமிழ் மொழியை அவமதிப்புக்குள்ளாக்க செய்யப்பட்ட செயற்பாடாக உள்ளதோ? என சந்தேகிக்க வைப்பதாக தன் கருத்துக்களை இது தொடர்பில் மேற்கொண்ட கேட்டல்களின் போது கவிஞர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் ஊடக வெளிப்படுத்தல்களுக்கான எல்லா பயன்பாடுகளின் போதும் அலங்கரிக்கப்பட்ட மேடையில் பின்னணியில் காட்சிப்படுத்தப்பட்ட எழுத்துப்பிழையோடு உள்ள பெயரே கொண்டு செல்லப்படும்.
இது மொழியை சரியாக எழுதுவதில் தேர்வற்ற மக்களா இவர்கள் என்ற கேள்வியை எழுப்பி நிற்கும் என்பது திண்ணம்.
வடமாகாண கல்வித் திணைக்களம்
சரிபார்த்தல் என்பதும் செயற்பாட்டில் கம்பீரமாக தோற்றமளிப்பதற்கு சிறந்த நேர்த்தியான அணுகல் வேண்டும் என்பதும் நடைபெற்ற ஆண்டு நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழாவில் கருத்தில் எடுக்கவில்லை என்பதை ஏற்பாட்டாளர்களும் பாடசாலைச் சமூகமும் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.
இந்நிகழ்வில் கல்விப்புலமையாளர்கள், உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்ட போதும் தவறோடு உள்ள காட்சிப்படுத்தலுக்குப் பதிலாக சரியாக உள்ளதை மாற்றிட்டுக்கொள்ளவோ அல்லது அதனை அகற்றி விடவோ முயற்சிக்கவில்லை.
சிறுபிள்ளத்தனமாக அதனை கண்டும் காணாமல் சென்றது தமிழ் மொழியை அவமதிப்பதாகவே கருதவேண்டியுள்ளதாக தமிழார்வலர்கள் தங்கள் விசனத்தை வெளிப்படுத்துவதோடு, இனிவரும் நிகழ்வுகளிலாவது இது போன்ற மொழி அவதிக்கப்படும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்படக் கூடாது என அவர்கள் தங்கள் கோரிக்கையை முன் வைக்கின்றமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.
வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் இது தொடர்பில் கவனமெடுக்குமா? என்பதை இனிவரும் அதன் செயற்பாடுகளின் ஊடாகவே அவதானிக்க முடியும் என்பதும் நோக்கத்தக்கது.