Courtesy: uky(ஊகி)
வீதியில் உள்ள விபத்துக்களை ஏற்படுத்தக்கூடிய குழிகளை தவற விட்ட வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் மீது பயணிகள் விசனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
முள்ளியவளையில் இருந்து ஒட்டுசுட்டான் செல்லும் பாதையில் வெள்ளமலை ஏற்றம் என மக்களால் அழைக்கப்படும் 33 ஆவது கிலோமீற்றர் கல்லருகில் வீதியில் உள்ள குழி பற்றியே, சமூக ஆர்வலர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
வீதி செப்பனிடல்
காபைற் வீதியாக உள்ள முல்லைத்தீவு மாங்குளம் வீதியான A34 வீதியின் ஒரு பகுதியாக முள்ளியவளை ஒட்டுசுட்டான் வீதி அமைந்துள்ளது.
பெருந்தெருக்கள் அபிவிருத்தியின் போது காபைற் வீதியாக மாற்றப்பட்ட இது அதனைத் தொடர்ந்து வரும் நாட்களில் பராமரிக்கப்பட்டு, அதில் ஏற்படும் பழுதுகளை செப்பனிட்டு வருகின்றனர்.
கடந்த மாதமளவில், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பணியாளர்களால், வீதிகளில் உள்ள விபத்துக்களை ஏற்படுத்தவல்ல மற்றும் பயணத்திற்கு அசௌகரியமாக இருக்கக்கூடிய பகுதிகளை இனம் கண்டு செப்பனிடும் பணிகள் நடைபெற்றிருந்தது.
ஆயினும், இங்கு காட்டப்படும் வீதியிலுள்ள குழி தவறவிடப்பட்டுள்ளது.இந்த குழி உந்துருளிகளில் மற்றும் ஈருருளிகளில் பயணிப்போரை விபத்துக்குள்ளாக்கக் கூடியளவில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
செப்பனிடலின் போது இவ்வளவு பெரிய குழி எவ்வாறு கவனிக்கப்படாது போனது என கேள்வி அவர்கள் எழுப்புகின்றனர்.
வீதிகளில் யானைகள்
முள்ளியவளையில் இருந்து ஒட்டுசுட்டான் நோக்கி, இந்த வழியினால் பயணப்படும் மக்கள், இரவுப்பொழுதுகளில் வீதிகளில் யானைகளை எதிர்கொள்வது வழமையான விடயமாக இருக்கின்றது.
முள்ளியவளையில் இருந்து கூழாமுறிப்பு வரையிலான மூன்று கிலோமீற்றர் தொலைவு இருபக்கங்களிலும் காடுகளைக் கொண்டுள்ளது.
இந்த சூழலில், பாதையில் பணத்தடையை ஏற்படுத்தி எதிர்பாராத விபத்தினை ஏற்படுத்தி விடக்கூடிய, இந்த குழியைச் செம்பனிடுதல் அத்தியாவசியமான விடயமாகும்.
இந்த குழியுள்ள வீதியின் பகுதி கரைத்துறைப்பற்று பிரதேச செயலக எல்லைக்குள் முள்ளியவளை பிரதேச சபையினால் நிர்வகிக்கப்படும் பிரதேசத்திற்குள் வருவதும் குறிப்பிடத்தக்கது.
பொறுப்புள்ளவர்களாக தங்களை எடுத்துக்காட்டுவதற்கு உரிய தரப்பினருக்கு, இதனை செப்பனிட்டு மக்களின் அசௌகரியத்திற்கு தீர்வு வழங்குதல் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்பது திண்ணம்.