படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உட்பட ஏழு முக்கிய சம்பவங்களின் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளதை ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன (Eran Wickramaratne) பாராட்டியுள்ளார்.
குறித்த விடயத்தினை அவர் தனது சமூக ஊடகம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இது சிறந்த முயற்சி இந்த சம்பவங்கள் குறித்து நான் நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை கோரியுள்ளேன்.
மறுக்கப்பட்ட நீதி
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி, இந்த சம்பவங்களில் நீதி நிச்சயமாக மறுக்கப்பட்டுள்ளது. முழுமையான பக்கச்சார்பற்ற துரிதமான விசாரணைகள் இடம்பெறும் என நான் நம்புகின்றேன். இதன் மூலம் உண்மையான குற்றவாளிகளை தண்டிக்கலாம்.
இது இலங்கையின் அபிவிருத்திக்கு அவசியமான சட்டத்தின் ஆட்சி மீதான மக்கள் நம்பிக்கையை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் தர்மரட்ணம் சிவராம் படுகொலை, லலித் குகன் காணாமலாக்கப்பட்டமை உட்பட முக்கிய ஏழு சம்பவங்கள் குறித்து விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல், மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்த விசாரணைகளையும் தீவிரப்படுத்துமாறு பதில் காவல்துறை மா அதிபருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இலங்கையின் பிரபல வர்த்தகர் தினேஸ் ஷாப்டரின் (Dinesh Schaffter) மரணம், வெலிகமவில் டபில்யூ 15 ஹோட்டலிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டமை குறித்தும் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.