மியன்மாரில் சிறுபான்மையினராக இருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்கள், இலங்கை
கடலில் தமிழ் கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்டு, கடற்படையினரால் திருகோணமலைக்கு
அழைத்துச் செல்லப்பட்டு இரண்டு நாட்கள் ஆகியும், அவர்களின் நிலை தெளிவில்லாமல்
உள்ளது.
மீட்கப்பட்ட நூற்றுக்கும் அதிகமான ரோஹிங்கியாக்கள் குறித்து முடிவெடுக்க
அவகாசம் தேவை என்று அரசாங்கம் கூறுகிறது.
மிரிஹானைக்கு பேருந்துகள் மூலம் அனுப்பப்பட்ட அந்த அகதிகள் இடையில்
நிறுத்தப்பட்டு மீண்டும் திருகோணமலைக்கே அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அடுத்தக்கட்ட நடவடிக்கை
மிரிஹானை நோக்கிய பயணத்தில் ஹபரணையை அடைந்த போது திருப்பி அனுப்பப்பட்ட அவர்களை நாளை குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் சந்தித்த பிறகே
அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திருகோணமலை பிராந்திய ஊடகவியலாளர்கள்
கூறுகின்றனர்.
அதேவேளை, வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர அந்த திணைக்கள
அதிகாரிகள் கால அவகாசம் கேட்டுள்ளதாக ஊடகவியலாளர் ஒருவரின் முகப்புத்தக பக்கத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
“சட்ட விசாரணை, இடவசதி தொடர்பான தேவைகள் பூர்த்தி செய்தப்பட்டதன் பின்னர்
ஓரிரு நாட்களில் இவர்கள் கையளிக்கப்படுவார்கள்” என அருண் ஹேமசந்திர பதிவிட்டுள்ளார்.
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கடலை, பாழடைந்த கடற்றொழில் படகொன்றில் வந்தடைந்த
நிலையில், திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போர்
அனாதைகள் அடங்கிய குழு நீதிமன்றத்தால் மிரிஹானை தடுப்பு முகாமுக்கு
அனுப்பி வைக்கப்பட்டனர்.
பதினைந்து நாட்களுக்கும் மேலாக கடலில் பயணத்தை மேற்கொண்டு டிசம்பர் 19ஆம் திகதி காலை முல்லைத்தீவு கடற்கரையை வந்தடைந்த போரினால் பாதிக்கப்பட்ட
ரோஹிங்கியாக்கள், முப்பது வருடங்களாக போரினால் பாதிக்கப்பட்ட அப்பகுதியைச்
சேர்ந்த தமிழக கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்டனர்.
தேவையான வசதிகள்
அன்றைய தினம் பிற்பகல், அவர்கள் வந்த அதே படகில் திருகோணமலை துறைமுகத்திற்கு
மாற்றுவதற்கு இலங்கை கடற்படையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
டிசம்பர் 20ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை தந்த கர்ப்பிணிப்
பெண், சிறுவர்கள் உள்ளிட்ட 115 பேர் அடங்கிய குழுவினரின் சுகாதார நிலையை
பரிசோதித்த பின்னர் மாவட்ட செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அந்த மக்கள் அனைவருக்கும் தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளதாக அரசாங்கம் அன்றே
அறிவித்தது.
“நாங்கள் அவர்களை சர்வதேச விதிமுறைகளுக்கு அமைய நடத்துகிறோம்.
அவர்களுக்கு
மருந்து, உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் வழங்கி வருகிறோம்” என
வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித
ஹேரத் 20ஆம் திகதி அன்று கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
அதேவேளை, கிழக்கைத் தலைமையகமாகக் கொண்ட அஹம் மனிதாபிமான வள நிலையம் (AHAM
Humanitarian Resource Center) திருகோணமலை துறைமுகத்தில் கூடாரத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த ரோஹிங்கியா அகதிகளுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு
செய்திருந்தது.
மியன்மாரின் தொடர்ச்சியான அடக்குமுறையில் இருந்து தப்பிய ரோஹிங்கியாக்கள்
வியாழக்கிழமை முல்லைத்தீவு கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை
காலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், திருகோணமலை நீதவான்
அர்ஜூன் ஆரியரத்தினம் களத்திற்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆய்வு செய்தார்.
விளக்கமறியல்
115 பேர் கொண்ட குழுவினர் பிற்பகல் இரண்டு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டு
திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், நேற்றைய தினம் (டிசம்பர் 21) அவர்களை மிரிஹானை தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லுமாறு
நீதவான் அர்ஜூன் ஆரியரத்தினம் உத்தரவிட்டிருந்தார்.
படகை செலுத்திச் சென்ற சந்தேகிக்கப்படும் 11 பேரையும் விளக்கமறியலில்
வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், அவர்கள் நேற்றைய (டிசம்பர் 21) நிலைப்படி திருகோணமலை ஜமாலியா
முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
20ஆம் திகதி அன்று திருகோணமலை துறைமுகத்தில் ஒரு ரோஹிங்கியா போர் அனாதை பிரதேச
ஊடகவியலாளர்களிடம் ஹிந்தி மொழில் உயிர் பிழைப்பதற்காக பர்மாவில் இருந்து
வந்ததாக கூறியிருந்தார்.
“நீண்ட காலம் பர்மாவில் இருந்த போது பல பிரச்சினைகளை சந்திக்க
வேண்டியிருந்ததால் இங்கு வந்தோம். ரக்கைன் மாநிலத்தில் சண்டை வெடித்துள்ளது.
எப்போதும் குண்டுவீச்சு.
இதனால்தான் அனைவரும் மிகவும் பயப்படுகிறார்கள். நாங்கள் மிகவும்
வருத்தப்படுகிறோம்.
மக்கள் செத்து மடிகிறார்கள். நிலைமை மோசமாகி வருவதால், எங்களால் அங்கு வாழ
முடியவில்லை. அந்த சமயம் பணத்தை வசூலித்து இந்த படகில் நாட்டை விட்டு
வெளியேறினோம்.
ஏனென்றால், எங்களை ஏற்றுக்கொள்ளாமையால், தாக்கப்பட்டு, நாளுக்கு நாள்
கொல்லப்படுகிறோம்.”
டிசம்பர் 4ஆம் திகதி பர்மாவின் ரக்கையின் மாநிலத்தில் இருந்து மூன்று கடற்றொழில் படகுகளில் 120 பேர் கொண்ட குழுவொன்று புறப்பட்டதாகவும் அவர்களின் இரண்டு
படகுகள் வழியில் பழுதடைந்ததாகவும் அதனால் அவர்கள் அனைவரும் ஒரே படகில்
ஏறியதாகவும் எமது திருகோணமலை பிராந்திய ஊடகவியலாளர் குறிப்பிடுகின்றார்.
பயணத்தின் போது இரு குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்ததாகவும்,
அவர்கள் கடலில் வீசப்பட்டதாகவும் போர் அந்த ரோஹிஞ்யாக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த 115 அகதிகளில் 39 ஆண்களும், ஒரு கர்ப்பிணி பெண் உட்பட 27 பெண்களும், 49
சிறுவர்களும் உள்ளடங்குவதாக திருகோணமலை பிராந்திய ஊடகவியலாளர் மேலும்
தெரிவித்தார்.
மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்கள் ரகயின் மாநிலத்தில் முஸ்லிம்
ரோஹிங்கியாக்களுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்திய 2017ஆம் ஆண்டு முதல்
10 இலட்சத்திற்கும் அதிகமானோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள்
சபை மதிப்பிட்டுள்ளது. இவர்களில் 965,000 பேர் அண்டை நாடான பங்களாதேசில்
தஞ்சமடைந்துள்ளனர்.