ரோஹிங்கிய அகதிகளை தடுத்து வைத்திருப்பது மனித உரிமை மீறலாகும் என்று இலங்கையின் முன்னணி மனித உரிமைகள் செயற்பாட்டாளா் ருக்கி பெர்னாண்டோ விமர்சித்துள்ளார்.
ரோஹிங்கிய அகதிகள் குற்றவாளிகளோ, சந்தேகநபர்களோ அல்ல என்பதனால் அவர்களைத் தடுத்துவைப்பது முற்றிலும் தவறு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் ஐக்கிய நாடுகள் அலுவலக அதிகாரிகள், மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு இடமளிக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச அடிப்படைச் சட்டம்
அண்மையில் மியன்மாரில் இருந்து படகில் வந்த 115 அகதிகள் முல்லைத்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டனர். கப்பலில் இருந்த 12 பணியாளர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதுடன், எஞ்சிய 103 பேர் முல்லைத்தீவு விமானப்படைத்தளத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
தற்போதைக்கு அவர்களை மீண்டும் மியன்மாருக்கே திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
அகதிகள் அல்லது புகலிடக்கோரிக்கையாளர்கள் அச்சுறுத்தலை எதிர்கொள்ளக்கூடிய அபாயம் உள்ள நாட்டுக்கு அவர்களை வலுகட்டாயமாகத் திருப்பி அனுப்பாதிருத்தல் எனும் சர்வதேச அடிப்படைச் சட்டத்துக்கு முரணான விதத்தில் மியன்மார் அகதிகளை மீண்டும் அந்நாட்டுக்குத் திருப்பியனுப்புவது ஏற்புடையதல்ல என்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆணைக்குழுவின் நிலைப்பாடு
இதேவேளை, ரோஹிங்கிய அகதிகளை மீண்டும் மியன்மாருக்கே திருப்பி அனுப்பும் விடயம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சர்வதேச மனிதாபிமான நடைமுறைகளை மீறும் இச்செயற்பாடு குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆய்வு மற்றும் கண்காணிப்பு பிரதிப் பணிப்பாளர் நிஹால் சந்திரசிறியிடம் வினவிய போது, இது குறித்த தகவல்களை ஆணைக்குழு இதுவரை அறிந்திருக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த விடயம் குறித்து ஆராய்ந்து அது தொடர்பான ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.