நானுஓயா- ரதல்ல கீழ் பிரிவில் காணப்படுகின்ற வீதியை உடனடியாக புனரமைத்து
தருமாறு கோரி இன்று (14) பொதுமக்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தோட்டத்தில் 300 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்ற
போதிலும் தலவாக்கலை செல்லும் இரண்டு கிலோமீட்டர் தூரங்கொண்ட
வீதி பல வருட காலமாக புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுகிறது.
இதனால் இங்கு வாழும் மக்கள் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத
நிலையில் இந்தப் பாதை காணப்படுவதாக தெரிவித்து இப்பாதையை உடனடியாக சீரமைத்து
தருமாறு கோரியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
இந்த போராட்டத்தில் பொதுமக்களும் பாடசாலை சீருடையுடன் பாடசாலை மாணவர்களும்
இணைந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தங்கள் கோரிக்கை அடங்கிய பதாதைகளை
ஏந்தியவண்ணம், கோஷங்களை எழுப்பியவாறும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த அரசாங்கத்தில் 2020 ஆம் ஆண்டு புனரமைப்பு பணிக்காக நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டு பணிகளை ஆரம்பிப்பதற்கு . அடிக்கால் நட்டப்பட்டு வேலைத்திட்டங்கள்
ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இடையில் கைவிடப்பட்டுள்ளது.
வீதி புனரமைப்பு
தற்போது இந்தப் பாதையின் ஊடாக செல்ல முடியாத நிலையில் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், கர்ப்பிணி தாய்மார்கள் வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள்
தொழிலுக்கு செல்பவர்கள் என பலரும் ஒவ்வொரு நாளும் பல்வேறு சிரமத்துக்கு
மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்தப்பாதையினை உடனடியாக செய்து தருமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.