மனோ கணேசன் உட்பட பலரும் தேசிய பட்டியல் வாய்ப்பு கோரியுள்ளனர். உரிய பரிசீலனையின் பின்னர் தீர்மானம் எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara) தெரிவித்துள்ளார்
கொழும்பில் (Colombo) நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தவர்களுக்குத் தேசியப் பட்டியல் ஊடாக
வாய்ப்பளிப்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்
தேசியப் பட்டியல் விவகாரம் தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்
இதேவேளை, எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணிக்கு கிடைத்த இரண்டு தேசியப்பட்டியல் பதவிகளுக்கு யாரை நியமிப்பது என்பதில் இழுபறி நிலை நீடிப்பதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகளின்படி புதிய ஜனநாயக முன்னணிக்கு இரண்டு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் கிடைத்துள்ளன.
புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியலில் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன(dinesh gunawardena) மற்றும் புதிய ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகமாக இருந்த ஷர்மிளா பெரேரா(Sharmila Perera) ஆகியோரின் பெயர்கள் முன்னணியில் உள்ளன.
எனினும், புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இரு பதவிகளுக்கு நியமிக்கப்படுபவர்கள் தொடர்பில் இதுவரையில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.