பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக விஸ்தரிக்கப்படாமை மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தை வணிக ரீதியான துறைமுகமாக செயல்படுத்துவது தொடர்பில் இந்தியாவின் அழுத்தத்தை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்குவது தொடர்பில் தமிழ் பிரதிநிதிகளின் தலையீட்டில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அங்கம் வகிக்கும்
கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக இணைந்து இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகர்
சந்தோஷ் ஜாவை சந்திப்பதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்திப்பிலேயே மேற்படி விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் வைத்து சந்திப்பு
இதன்படி எதிர்வரும் 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் வைத்து சந்திப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஈழ மக்கள் புரட்சிகார
விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழீழ விடுதலை
இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் மக்கள் விடுதலைக்
கழகத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர்
சிவானந்தன் நவநீதராஜா (வேந்தன்) மற்றும் சமத்துவ கட்சியின் தலைவர் முருகேசு
சந்திரகுமார் ஆகியோர் குறித்த சந்திப்பில் இடம்பெறுகின்றனர்.
குறித்த சந்திப்பில் ஆறு கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக தயாரித்த மனு இந்தியா
உயர்தனிகரிடம் கையளிக்கப்படவுள்ளது.
குறித்த சந்திப்பில் மாகாண சபை தேர்தலை விரைவாக நடாத்துமாறு இலங்கை
அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்குவதோடு நிலையான சமஸ்டி தீர்வினை அடைவதற்கு
இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியம் பற்றியும் கலந்துரையாடப்பட உள்ளது.
உயரஸ்தானிகருடன் பேசப்படுகின்ற விடயங்கள் மனு வடிவில் தயாரிக்கப்பட்டு ஆறு
கட்சிகளின் தலைவர்கள் கையொப்பத்துடன் அவர் ஊடாக இந்திய பிரதமர் நரேந்திர
மோடிக்கு கையளிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இம்மாத இறுதிக்குள் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா
இந்தியாவுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் இன்னொரு புறம் இடம் பெற்று வரும்
நிலையில் தமிழ் கட்சிகளின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.

