Courtesy: H A Roshan
கிழக்கு மாகாண அரச சேவை ஆணைக்குழுவிற்கான புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோருக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த நியமனங்களை, திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர நேற்று (18) வழங்கி வைத்துள்ளார்.
ஆளுநரின் பணிப்புரை
இதன்போது, புதிய ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கு சகல அதிகாரங்களும் வழங்கப்பட்டு, அரசியல் தலையீடுகளின்றி தமது சேவைகளை வழங்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்ற பணிப்புரையையும் ஆளுநர் விடுத்துள்ளார்.
ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற முன்னாள் திருகோணமலை மாவட்ட செயலாளரான பி.எச்.என். ஜெயவிக்ரமவும் உறுப்பினர்களாக,
ஓய்வுபெற்ற முன்னாள் திருகோணமலை மேலதிக மாவட்டச் செயலாளரான கே. அருந்தவராஜா, ஓய்வுபெற்ற முன்னாள் அம்பாறை பிரதேச செயலாளரான ஜி.எல்.ஆரியதாச, ஓய்வுபெற்ற பாடசாலை ஆசிரியரான மாயா எஸ். ஹமீத் ரிபாஹிதீன் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் உதவி வெடிபொருட்கள் கட்டுப்பாட்டாளரான எஸ். முகமது இக்ரிமா ஆகியோருமே நியமிக்கப்பட்டுள்ளனர்.