பல மாதங்களாக நீடித்த வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்து நேற்று (21) முதல் புதிய கடவுச்சீட்டுகளை வழங்க குடிவரவு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
புதிய கடவுச்சீட்டின் நிறம் மாற்றப்பட்டு நீல நிறத்தில் உள்ளது. மேலும் பழைய கடவுச்சீட்டில் 64 பக்கங்களும், புதிய கடவுச்சீட்டில் 48 பக்கங்களும் உள்ளன.
முந்தைய கடவுச்சீட்டுகளில் N எண்கள் இருந்தநிலையில் புதிய கடவுச்சீட்டில் P எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் புதிய கடவுச்சீட்டின் அனைத்து பக்கங்களிலும் அழகான புகைப்படங்கள் பொறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய கடவுச்சீட்டுகள் கையிருப்பு
அதன்படி, புதிய கடவுச்சீட்டில் ஸ்ரீ தலதா மாளிகை, யாழ்ப்பாணம் நல்லூர் கோவில், கொழும்பு தாமரை கோபுரம், வரலாற்று சிறப்புமிக்க காலி டச்சு கோட்டை சுவர், பொலன்னறுவை வரலாற்று இடங்கள், ரிட்டிபன்ன மீன்பிடி தொழில் அரக்கு நைனிவியா பாலம், சீகிரியா, தேயிலை தோட்டம், இறப்பர் வெட்டு இடம் மற்றும் இலங்கையின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் மற்றும் பாரம்பரிய தொழில்கள் ஆகியவை நாட்டின் கலாச்சாரத்தை வெளிப்படுத்துகின்றன.
புதிய கடவுச்சீட்டுகள் போதுமான அளவு கையிருப்பு பெற்றுள்ளதால், எதிர்காலத்தில் கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்படும் நெரிசல் குறையலாம் என குடிவரவு குடியகல்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், எதிர்வரும் காலங்களில் கடவுச்சீட்டு வழங்குவது சாதாரணமாகிவிடும் என்றும் குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலதிக தகவல் – சிவா மயூரி