கிண்ணியா – காக்காமுனை ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையதில் கடந்த நான்கு
நாட்களாக, கடமையில் வைத்தியர் இல்லாததனால் நோயாளிகள் பல்வேறு சிரமங்களை
எதிர்நோக்கி வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,
இந்த வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த வைத்தியர், தொடர்ச்சியாக சுகவீன
விடுமுறையில் இருப்பதால், இந்தநிலை ஏற்பட்டிருப்பதாக தெரிய வருகிறது.
கடந்த 25ஆம் திகதி, குறித்த வைத்தியர் பணியில் இருந்த போது, அவருக்கும், அங்கு
சிகிச்சைக்காக வந்த ஒரு குழந்தையின் தந்தைக்கும் இடையே வாய் தர்க்கம்
ஏற்பட்டதாகவும், அன்றைய தினத்திலிருந்து வைத்தியர் வைத்தியசாலைக்கு
சமூகமளிக்கவில்லை எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மக்கள் அவதி
இந்தப் பிரச்சினை தொடர்பாக, குறித்த வைத்தியர், வியாழக்கிழமை (27) பொலிஸில்
முறைப்பாடு செய்திருப்பதாகவும், அதற்கிணங்க, முறைப்பாடு செய்யப்பட்ட நபரை
அழைத்து, இன்று (28) விசாரிக்க உள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நோயாளிகளின் கஷ்டங்களை கருத்தில் கொண்டு, கிண்ணியா கச்சக்கொடதீவு
வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர், இன்று (28) காலை இந்த வைத்தியசாலைக்கு
வந்து, 15 நிமிடங்கள் மாத்திரம் ஒரு சில நோயாளர்களை பார்த்துவிட்டு, தனது
வைத்தியசாலைக்கு சென்று விட்டதாகவும் பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாக, இன்றும் சிகிச்சை பெற வந்த பல நோயாளர்கள் இங்கு வைத்தியர்
ஒருவர் இல்லாமையினால், ஏமாற்றத்துடன் வீடு திரும்பி சென்றதைக் காண முடிந்துள்ளது.