நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் திங்கட்கிழமைக்குள் தீர்ந்து போகக்கூடும் என்று இலங்கை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
ஊடக சந்திப்பில் இன்று(01) உரையாற்றிய போதே சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தனநாயக்க (Kusum Chandananayake) இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த துணைத் தலைவர் சந்தனநாயக்க, இன்று முதல் புதிய விநியோக கோரல்கள் எதுவும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு (Ceylon Petroleum Corporation) வழங்கப்படாததால், திங்கட்கிழமைக்குள் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என கூறியுள்ளார்.
விரைவான நடவடிக்கை
கடந்த காலங்களில் சங்கம் ஒருபோதும் வேலைநிறுத்த நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்றாலும், விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்ட 3% கொடுப்பனவை நீக்கிவிட்டு, அதை புதிய சூத்திரத்தால் மாற்றுவதற்கான இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தற்போதைய முடிவால் தங்களுக்கு வேறு வழியில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தன்னிச்சையான முடிவுகளை எடுத்ததற்காக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளரை குற்றம் சாட்டிய சந்தனநாயக்க , பிரச்சினையைத் தீர்க்க விரைவான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளார்.