ஐ.நாவும்(un), வெளிநாடுகளும், ஐ.எம்.எப்(imf) உம் இணைந்து புதிய கடற்றொழில் சட்டமூலம்
ஒன்றினை தயாரித்து அதனை அதிகாரிகளுடன் இணைந்து நடைமுறைப்படுத்துவதற்கு
முயல்வதாகவும், அதில் கடற்றொழிலாளர்களுக்கு துளி அளவும் நம்பிக்கை இல்லையென வடக்கு
மாகாண கடல் தொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா
தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(12) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்
இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்றையதினம் இலங்கையின் கடற்தொழில் திணைக்களத்தின் அதிகாரிகளும்,
இலங்கையினுடைய கடற்தொழில் அமைச்சர் அவர்களும் கடல் தொழிலாளர்களுக்காக
கொண்டுவரப்பட இருக்கின்ற புதிய சட்ட திருத்தம் தொடர்பாக ஊடக சந்திப்பு ஒன்றினை
கொழும்பிலே நடாத்தினர்.
வடக்கு கடற்றொழில் சமூகத்திற்கு கவலை
புதிதாக உருவாக்கப்பட்டு இருக்கின்ற அந்த புதிய சட்ட திருத்தம் தொடர்பாக
நேற்றைய தினம் திணைக்களத்தினுடைய தலைவர்கள் அல்லது சட்ட உருவாக்கிகள்
தெரிவித்த கருத்துக்களும், அந்த செயல்பாடும் வடக்கு கடற்றொழில் சமூகத்தை
பொறுத்த அளவிலே கவலை அளிக்கிறது.
புதிதாக கொண்டு வர இருக்கின்ற சட்டத்தில் என்ன இருக்கிறது என்பது தொடர்பாக
இதுவரைக்கும் வடமாகாணத்தில் இருக்கின்ற எந்த கடற்றொழில் சங்கங்களுக்கும்
தெரியப்படுத்தவில்லை. குறிப்பாக 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4ஆம் திகதி
யாழ்ப்பாணத்தில் அமைச்சர் சந்திரசேகரத்துடன் பேசுகின்ற போது புதிய
சட்டத்திருத்தத்தை எங்களுக்கு காண்பிக்குமாறு கூறியிருந்தோம். ஆனால் இன்று
வரைக்கும் அது சமர்ப்பிக்கப்படவில்லை. இந்த சட்டம் கடற்றொழிலாளர்களுக்காக
கொண்டுவரப்படுகிறதா அல்லது ஐ.எம்.எப் உட்பட வெளிநாடுகளின் விருப்பத்திற்காக
கொண்டுவரப்படுகின்ற சட்டமா என்ற கேள்வி எழுகின்றது.
உண்மையான கரிசனையோடு தான் செயல்படுகின்றீர்களா
அதாவது கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இருந்த புத்திஜீவிகள்,
அதிகாரிகளை நாங்கள் கேட்கின்றோம், நீங்கள் இந்த சட்டத்தின் மீதும், இந்த கடல்
மீதும் கடற்தொழிலாளர்கள் மீதும் உண்மையான கரிசனையோடு தான்
செயல்படுகின்றீர்களா என்ற கேள்வியை முன் வைக்கின்றோம்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் 2009க்கு பின்னர் எங்களுடைய கடல் வளங்களும், கடல்
சூழலும் திட்டமிட்டு இதே அதிகாரிகளால் அழிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது.
இதனால் ஒரு சமூகம் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. ஆனால் நீங்கள்
நேற்றையதினம் வந்து, இந்த சட்டத்தினால் கடற்றொழிலார்களுக்கு நன்மை இருக்கின்றது,
கடற்றொழிலார்களை பாதுகாக்கின்றோம் என்று கருத்துக்களை தெரிவிக்கின்றீர்கள். அந்த
கருத்துடன் எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஏனென்றால் இதே அதிகாரிகள், இதே
திணைக்களங்கள் பல சட்டங்கள் இருந்தும் நடைமுறைப்படுத்தத் திராணியற்று
இருந்துவிட்டு நேற்றையதினம் இதனை கூறுகின்றார்கள்.
நாங்கள் சுதந்திரமாக தொழில் செய்யக்கூடிய சூழல் இருக்கின்றதா
எங்களது கடலில் நாங்கள் சுதந்திரமாக தொழில் செய்யக்கூடிய சூழல் இருக்கின்றதா
இல்லையா என்ற கூட உங்களுக்கு தெரியாது. வெறுமனே வெளிநாடுகள் அல்லது ஐ.எம்.எப்
இன் விருப்பத்திற்கு சட்டங்களை தயாரித்து விட்டு இலங்கையில் இருக்கின்ற
உள்ளூர் சிறு கடல் தொழிலாளர்களை கருவறுப்பதற்கு இந்த அதிகாரிகளும் தயாராகி
விட்டார்கள்.
குறிப்பிட்ட காலத்திற்குள்ளே அந்த சட்ட திருத்தம் தொடர்பாக கருத்துக்களை
இணையவழி ஊடாக எங்களுக்கு தெரியப்படுத்தப்படும் என கூறுகின்றார்கள். சட்டத்தில்
என்ன இருக்கின்றது என்பது எங்களுக்கு தெரியாது. நாங்கள் ஒரு கடற்றொழில்
சமூகம். எமக்கு இணைய வழியிலேயா நீங்கள் கருத்துக்களை தெரிவிப்பது? இந்த
அரசாங்கம் மக்களுக்கான அரசாங்கம் என கூறுகின்றது. ஆனால் இந்த அரசாங்கத்தை
மக்களை ஏமாற்றும் அரசாங்கமாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம்.
யுத்தம் முடிந்து 15 ஆண்டுகளாக கடல் வளங்கள் அழிக்கப்படும் போது நாங்கள்
குரல் கொடுத்த போதும் மௌனமாக இருந்த அதிகாரிகள் அல்லது புத்திஜீவிகள் இன்று
புதிய ஒரு சட்டம் ஒன்றை ஐ.எம்.எப் இன் விருப்பத்திற்கு கொண்டு வந்து திணிப்பதை
நாங்கள் கடற்றொழில் சமூகமாக ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். வாக்கு போட்ட
மக்களுக்கு NPP அரசாங்கம் செய்கின்ற மாபெரும் துரோகமாகத்தான் நாங்கள் இதனை
பார்க்கின்றோம்.
ஐ.நாவும் துணை போகின்றதா
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதியே நீங்களும் இலங்கை
அரசாங்கத்தோடு சேர்ந்து எங்களுடைய நாட்டிலே எங்களுடைய இறைமையை மீறி உங்களுடைய
விருப்பத்திற்கு அல்லது வெளிநாடுகளுடைய விருப்பத்திற்கு சட்டத்தை தயாரித்து
சிறு கடல் தொழிலாளர்கள் மீது திணிக்கின்றீர்கள். இதற்கு ஐ.நாவும் துணை
போகின்றதா என்ற கேள்வி எமக்கு எழுகின்றது.
ஐ.நா என்ற நிறுவனம் எமது மக்களின் நியாயத்தை அல்லது அடிப்படை உரிமைகளை
பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஐ.நாவும்
உலக உணவுத் திட்டமும் இணைந்து வெளிநாடுகளின் விருப்பத்திற்கு ஏற்ப சட்டத்தை
கொண்டு வந்து எங்களது அதிகாரிகளுடன் இணைந்து கடற்றொழிலார்களுடைய விருப்பம் இல்லாமல்
நடைமுறைப்படுத்த பார்க்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.