யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து நீல நிறப் பாடசாலைப்
புத்தகப் பை (யுனிசெவ் நிறுவனத்தின் புத்தகப் பை), சிறுவர்கள் விளையாடும்
பொம்மை என்பவற்றோடு அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித என்புத் தொகுதி தொடர்பான மனித
என்பு ஆய்வு அறிக்கையை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு
சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையாவுக்கு யாழ். நீதிவான்
ஏ.ஏ.ஆனந்தராஜாவால் கட்டளை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வுப் பணிகள்
செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப்
புதைகுழி தொடர்பான அகழ்வுப் பணிகள் யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின்
கண்காணிப்பில் துறைசார் நிபுணரும் பேராசிரியருமான ராஜ் சோமதேவாவின் தலைமையில்
இடம்பெற்றிருந்தன.
சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான
குழுவினரும் அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகியிருந்தனர். நேற்றைய தினம்
இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.
எதிர்வரும்
21ஆம் திகதி அகழ்வுப் பணிகள் மீள ஆரம்பமாகவுள்ளன.
இந்நிலையில் செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின்
போது எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நீல நிறப் பாடசாலைப் புத்தகப் பையோடு
(யுனிசெவ் நிறுவனத்தின் புத்தகப் பையோடு) சிறுவரினுடையது எனச்
சந்தேகிக்கப்படும் என்புத் தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டிருந்தது.
மனித என்பு ஆய்வு அறிக்கை
அந்த
என்புத் தொகுதிக்கு அருகில் சிறுவர்கள் விளையாடும் பொம்மை, ஆடை, சிறுமிகள்
பயண்படுத்தும் பாட்டா நிறுவனத் தயாரிப்பு காலணி, சிறு கண்ணாடி வளையல்கள்
என்பனவும் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட அந்த மனித என்புத் தொகுதி தொடர்பான மனித
என்பு ஆய்வு அறிக்கையை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் யாழ். நீதிவான்
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையாவுக்கு
நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவால் கட்டளை ஒன்று நேற்று வழங்கப்பட்டுள்ளது.