காலில் ஏற்பட்ட காயத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர், மேலதிக
சிகிச்சைக்காக கராபிட்டிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சில மணி நேரங்களுக்குப்
பிறகு, தலையில் ஏற்பட்ட பலத்த காயங்களால் உயிரிழந்தார்.
முன்னதாக, பத்தேகமவைச் சேர்ந்த ஓவியரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான உபுல்
துஷார(54), முழங்காலுக்குக் கீழே உள்ள காயங்களுக்கு சிகிச்சை பெறுவதற்கு பத்தேகம
பிரதேச மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவர், மேலதிக சிகிச்சைக்காக கராபிட்டிய போதனா மருத்துவமனைக்கு
மாற்றப்பட்டார்.
அவரை ஏற்றி சென்ற அம்புலன்ஸ் கராபிட்டியவை அடைந்த நேரத்தில், அவர்
மயக்கமடைந்தார்.
உடனடியாக அவர், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்ட போதும்,
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வாக்குமூலம்
பிரேத பரிசோதனை செய்த சட்ட மருத்துவ அதிகாரி மதுவந்தி ஜயசிங்க, தலையில்
ஆபத்தான காயங்கள் மற்றும் உடலின் பல பகுதிகளில் ஏற்பட்ட அதிர்ச்சியே
மரணத்துக்கு காரணம் என்பதை கண்டறிந்தார்.

இந்த நிலையில், நடத்தப்பட்ட மரண விசாரணையின் போது, மீபாவல என்ற இடத்தில் வந்து
கொண்டிருந்த போது, நோயாளி அம்புலன்ஸின் பின்புற கதவு வழியாக குதித்ததாக
ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
எனினும் நோயாளி வைத்தியாசாலையில் அனுமதிக்கப்படுகின்ற போது இந்த விடயத்தை,
அம்புலன்ஸ் ஊழியர்கள் பொலிஸாரிடம் தெரிவிக்கவில்லை.

இதனையடுத்து, தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சம்பவம் குறித்து முறையான
விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

