Courtesy: uky(ஊகி)
முள்ளியவளை தேசிய பாடசாலை ஒன்றின் முன்னுதாரணமற்ற செயற்பாட்டினால் மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
பாடசாலைக்கும் வீதிக்கும் இடையிலான பகுதியை சுத்தமாக பேணுவதில் பாடசாலை நிர்வாகம் கவனக்குறைவாக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நிழலை தரக்கூடிய மரங்களை நாட்டி வளர்த்துள்ளதோடு நித்திய கலியாணி பூச்செடிகளையும் பாடசாலை மதிலுக்கு அருகில் அழகை பெருக்கும் வண்ணம் வைத்திருந்த போதும் அப்பகுதியினை சுத்தமாக பேண தவறிவிட்டதாக குற்றச்சாட்டும் முன் வைக்கப்பட்டுள்ளது.
அகற்றப்படாத குப்பைகள்
முல்லைத்தீவில் உள்ள பிரதான வீதியொன்றில் அமைந்துள்ள இப்பாடசாலை முல்லைத்தீவில் உள்ள பழமையான பாடசாலைகளில் ஒன்றாகும்.
உயர்தர பாட அலகுகளையும் கொண்டு இயங்கி வருகின்றது.
கல்லூரியின் கட்டடத் தொகுதிக்கு முன்னால் விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது.அதற்கு அடுத்து சுற்று மதிலும் அதற்கப்பால் பிரதான வீதியுமாக அமைவைக் கொண்டுள்ளது.
மதிலுக்கும் பிரதான வீதிக்கும் இடையிலான பகுதியில் மண்ணரிப்பை தடுப்பதற்காக சுற்று மதிலில் இருந்து சற்று வீதியின் பக்கமாக அத்திவாரம் போன்ற சீமெந்து கட்டும் இடப்பட்டுள்ளது.
இப்பகுதியில் நீண்ட நாட்களாக தேங்கியிருக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கைகளை எடுக்காது இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
பூச்செடிகளிடையே குப்பைகள் தேங்குவதோடு புற்செடிகளும் வளர்ந்திருக்கிறது.இவை பார்ப்போருக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
அவ்வாறிருக்க ஏன் கல்லூரி நிர்வாகம் இப்பகுதியை கிரமமான முறையில் சுத்தம் செய்து கொள்ள முயற்சிக்கவில்லை என கேள்வி எழுப்பப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
பிரதேச சபையின் செயல்
வீதியோரங்களை சுத்தமாக பேண வேண்டிய பொறுப்பு பிரதேச சபைக்கும் உண்டு.அவர்களும் இது தொடர்பில் கவனமெடுத்திருக்க வேண்டும்.
எனினும் அவர்கள் பாராமுகமாக இருப்பதாகவே இந்த பகுதியின் நிலைமையை பார்க்கும் போது எண்ணத் தோன்றுகின்றது.
பாடசாலை நிர்வாகத்தினரும் பிரதேச சபையினரும் இணைந்து செயற்படும் போது இப்பிரச்சினைக்கு இலகுவில் தீர்வைப் பெற்று அதனை நடைமுறைப்படுத்த முடியும் என இது தொடர்பில் ஆசிரியர் ஒருவருடன் உரையாடிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வீதிகளில் வைக்கப்படும் கழிவுகள் போட்டு கட்டி வைத்த குப்பைகளையே ஒழுங்காக பிரதேச சபையினர் அகற்றுவதில்லை.
அப்படியிருக்க அவர்கள் எப்படி இது தொடர்பில் கவனமெடுத்து ஒழுங்காக செய்யப் போகின்றனர் என இது தொடர்பில் கல்லூரிக்கு அண்மையில் வசிக்கும் முதியவர் ஒருவர் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.
மாணவர் காத்திருக்கும் இடம்
இப்பகுதியில் அமைக்கப்பட்ட சீமெந்து கட்டினை மாணவர்கள் இருக்கைகளாக பாவித்து வருவதையும் அவதானிக்கலாம்.
பாடசாலை விட்டதும் பேருந்துக்காகவும் தம்மை அழைத்து செல்ல வரும் பெற்றோருக்காகவும் மாணவர்கள் காத்திருக்கின்ற போது, இப்பகுதி மர நிழலும், சீமெந்து கட்டும் பாரியளவிலான பயன்பாட்டை கொடுத்து வருகின்றது.
மாணவர்கள் மட்டுமல்லாது பாடசாலை முடிந்ததும் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளும் பேரூந்துக்காக இப்பகுதியில் காத்திருக்கும் சந்தர்ப்பங்களையும் அவதானிக்க முடிகின்றது.
அத்தோடு மாலை நேரங்களிலும் மதியம் பொழுதுகளிலும் பாடசாலைக்கு முன்னுள்ள மர நிழல்களில் மக்கள் கூடியிருப்பதையும் அடிக்கடி அவதானிக்க முடிகின்றது.ஒய்வு நேரங்களை செலவிடுவதற்காக இந்த கூடல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்தகைய பயன்பாடு மிக்க இப்பகுதியை சுத்தமாக பேணுவதில் ஏன் அக்கறை காட்ட முடியவில்லை.
பாடசாலை கற்றலில் சுத்தம் சுகம் தரும் என போதிக்கின்றன போதும் நடைமுறையில் அப்படியில்லாதது முன்னுதாரணமற்ற செயற்பாடாகவே அமைகிறது.
வலயக்கல்விப் பணிமணை
பாடசாலைகளின் செயற்பாடுகளை கண்காணித்து நெறிப்படுத்தி வரும் வலயக்கல்வி அலுவலகம் பாடசாலைகளின் சுற்றுப்புற தூய்மை, சுகாதாரம் தொடர்பில் கவனம் செலுத்தாததும் இவை போன்ற பாராமுகச் செயற்பாடுகளுக்கு காரணமாக அமைவதும் நோக்கத்தக்கது.
பாடசாலையின் அபிவிருத்தி சார்ந்து சிந்திக்கும் போது அதன் தூய்மை மற்றும் அழகுபடுத்தலிலும் கவனமெடுக்க வேண்டும்.
நகரத்தில் அமைந்துள்ள இந்த பாடசாலையின் வீதிக்கும் பாடசாலைக்கும் இடையிலான குப்பைகளை அகற்றி எந்நேரமும் தூய்மையாக இருக்கும் வண்ணம் பேண நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.