தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் பின்னர் நிறைவேற்றப்படாவிட்டால்,
வாக்காளர்கள், அது தொடர்பில் கேள்வி கேட்க உரிமை உண்டு என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் இன்று பேசிய அவர், இதனை உறுதிப்படுத்த,
தேர்தல் சட்டங்களில் திருத்தங்கள் தேவை என்பதை வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் தற்போதைய தேர்தல் முறையில், தேர்தலை திரும்பப் பெறும் முறை இல்லை
என்று கூறிய அவர், அத்தகைய சீர்திருத்தங்களின் அவசியத்தையும்
வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில், ஒரு அரசியல் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், அடுத்த தேர்தல்
வரை பொதுமக்கள் அதை விமர்சிக்கிறார்கள்.
மக்களின் பொறுப்பு
இது சுழற்சி முறையில் மீண்டும் நிகழ்கிறது என்றும், தேர்தல்கள் ஆணையாளர்
குறிப்பிட்டார். கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் தங்கள் பொறுப்புக்கள் முடிவடையும் என்று மக்கள்
நம்புகிறார்கள்.
அப்படி இல்லை.
குடிமக்களால் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள், கடமைகளை
நிறைவேற்றுவதை உறுதி செய்வதற்கான முழுமையான பொறுப்பு, அந்த குடிமக்களுக்கு
உள்ளது.
அரசியல்வாதிகள் அவ்வாறு செய்யத்தவறினால், அவர்களைப் பொறுப்பேற்க
வைக்கும் உரிமை குடிமக்களுக்கு உள்ளது என்றும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டில், மக்கள் வாக்காளர்கள் என்பதை விட நுகர்வோராகவே அதிகம்
செயற்படுகிறார்கள் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் கருத்து வெளியிட்டுள்ளார்.