யாழ்ப்பாணம் (Jaffna) கல்வியியற் கல்லூரிக்கு உடனடியாக நிரந்தர பீடாதிபதி
ஒருவரை நியமிக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்
செல்வராசா கஜேந்திரன் (S. Kajendran) தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, “யாழ்ப்பாணம் கல்வியியற் கல்லூரியில் மாணவர்கள் மிக மோசமான உளவியல்
நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக அங்கு கல்விபயிலும் ஆசிரிய
மாணவர்கள் தரப்பிலிருந்தும், அவர்களின் பெற்றோர்களின் தரப்பிலிருந்தும்
எங்களுக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிரந்தரமான பீடாதிபதி
யாழ்ப்பாணம் கல்வியியற் கல்லூரிக்கு ஒரு நிரந்தரமான பீடாதிபதி நியமிக்கப்படாத
நிலையில், பதில் பீடாதிபதியின் தலைமையில் தான் அது இயங்கிக்கொண்டிருக்கிறது.
ஏன் கல்வியியற் கல்லூரிக்கு ஒரு நிரந்தரமான பீடாதிபதி நியமிக்கப்படவில்லையென்ற
கேள்வி இருக்கின்றது.
கல்வி அமைச்சிடம் கோரிக்கை
ஆகவே அந்த மாணவர்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்கு அவசரமாக
குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
அதே நேரத்திலே உடனடியாக ஒரு நிரந்தர பீடாதிபதி ஒருவரை அந்த கல்வியியற்
கல்லூரிக்கு நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” எனவும் அவர்
தெரிவித்துள்ளார்.