Courtesy: Sivaa Mayuri
தொழில்துறை மற்றும் கனரக வாகனங்களுடன் இலங்கையில் வாகன இறக்குமதியை எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் அனுமதிப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
கைத்தொழில் மற்றும் கனரக வாகனங்கள் இறக்குமதிக்கு அனுமதி கிடைத்தவுடன், முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் இறக்குமதிக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இதனையடுத்து சிறிய வகை கார்களின் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும்
இந்தநிலையில் சொகுசு மற்றும் அதி சொகுசு வாகனங்கள் இறுதிக்கட்டமாக இறக்குமதிக்காக அனுமதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த திட்டத்தின் கீழ் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை வழங்குவதே அரசாங்கத்தின் கொள்கையாக இருக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
வரியில்லா இறக்குமதி மூலம் கிடைக்கும் வருவாய்
வெளிநாட்டு கையிருப்புக்கு ஏற்ப ஒரு வருடத்தில் இறக்குமதி செய்யக்கூடிய அதிகபட்ச வாகனங்களின் எண்ணிக்கை குறித்து மத்திய வங்கியின் ஆலோசனையை அரசாங்கம் பெறவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், வரி இல்லா திட்டங்களின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்யும் வகையில் பொதுத்துறை ஊழியர்களுக்கு அனுமதி வழங்குவதை அரசாங்கம் உடனடியாக பரிசீலிக்காது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரியில்லா இறக்குமதி மூலம் கிடைக்கும் வருவாய் குறைவாக இருப்பதே இதற்கான காரணமாகும்.
மற்றொரு அளவுகோலின்படி, புத்தம் புதிய வாகனங்கள் அல்லது இரண்டு ஆண்டுகளுக்குள் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |