வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை எல்லைக்குள் ஆழ்துளை கிணறுகளை அமைக்கும் போது
பிரதேச சபையின் அனுமதியினையும் பெற்றுக் கொள்வதற்கான தீர்மானம் ஒன்று
நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபையின் தவிசாளர் பா. பாலேந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம்(17) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் நிமித்தம்
ஆழ்துளை கிணறுகள் அமைப்பதை தடைசெய்வது தொடர்பாக கடந்த சபை அமர்வில்
கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பிரதேசசபையின் அனுமதி
அதற்கமைய சில காணிகளில் பாறைகள் உள்ளமையால் சாதரண கிணறுகள் அமைக்க முடியாத
சந்தர்ப்பங்களும் பொதுமக்களுக்கு ஏற்படுகின்றது.

இதேவேளை சில பகுதிகளில் 200
அடிவரை ஆழ்துளை கிணறுகளை அமைக்கின்றனர். இவ்விடயங்கள் தொடர்பாக நாம்
ஆராய்ந்துள்ளோம்.
எனவே, இவற்றை கருத்தில் கொண்டு நிலத்தடி நீரை பாதுகாக்கும் நோக்குடன் இனிவரும்
காலங்களில் சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் அமைப்பதாயின்
பிரதேசசபையின் அனுமதியினையும் பெறுமாறு வலியுறுத்தி தேசிய நீர்வழங்கல்
வடிகாலமைப்பு சபைக்கு உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கான தீர்மானம் ஒன்று
நிறைவேற்றப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

