Courtesy: uky(ஊகி)
யாழ் நகரில் மத்தியில் உள்ள ஒரு இடம் சுகாதாரமற்ற முறையில் முகம் சுழிக்க வைப்பதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
யாழ் அரச பேரூந்து நிலையத்திலிருந்து தொலைதூர தனியார் பேரூந்துகள் புறப்படும் இடத்திற்கு செல்லும் பாதையில் வலது பக்கமாக இந்த அவதானிப்பை அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
யாழ் செல்வா திரையரங்குக்கு முன்னுள்ள வீதியின் ஒரு பகுதியிலேயே குப்பைகள் கொட்டப்பட்டு அவை தேங்கி இருக்கின்றன.
அதிக மக்கள் கூடும் நகரில் பற்றைக் காடுகள் வளர்ந்த நிலத்துண்டில் குப்பைகள் அதிகம் கொட்டப்பட்டு வருவது தொடர்ந்து இருப்பதாகவும் அப்பகுதி மக்களிடம் மேற்கொண்ட உரையாடலின் போது அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
தொடரும் அவலம்
நகரின் சுகாதாரம் தொடர்பில் கண்காணிப்புக்களை மேற்கொண்டு இவ்வாறான இடங்கள் தொடர்பில் ஏன் இதுவரை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை?
இதற்கு பொறுப்பான துறை சார்ந்தவர்கள் தங்கள் பொறுப்புக்களை சரிவர செய்யவில்லை என்பதற்கு இது நல்ல சான்றாக அமைகின்றது.
நகரில் சேரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றி அவை நகரில் இருந்து தூர இடங்களில் கொண்டு சென்று கொட்டப்பட வேண்டும்.அப்படி இருக்கும் போது யாழ் நகரின் மத்தியில் குப்பை கொட்டும் இடம் எப்படி உருவாக்கப்பட்டது என கேள்வியெழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
சூழலின் சுகாதார நிலைமைகளை மாற்றி அமைக்கக்கூடிய இவ்வாறான குப்பை கொட்டப்படும் இடங்களை இனம் கண்டு அவற்றை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படாது நீண்ட நாட்களாக இது தொடர்ந்து செல்வது கவலைக்குரிய விடயமாகும்.
நகரின் எந்தவொரு பகுதியிலும் கழிவுகளைக் கொட்டி குப்பை மேட்டை உருவாக்கும் முயற்சிக்கு இடமளிக்கப்படுவது பொருத்தமற்ற அணுமுறையாகவே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாற்றம் வேண்டும்
ஈழத்தமிழர்களின் முகவரியாக யாழ்ப்பாணமே அமைகின்றது.இலங்கைத் தமிழர்கள் என்றால் அது யாழ்ப்பாணம் என்ற எண்ணக்கருவே உலகளவில் வியாபித்து உள்ளது.
அப்படியொரு சூழலில் யாழ் நகரின் தூய்மையை குழப்பும் வகையில் வீசப்பட்டு தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றாதது கவலைக்குரிய விடயமாகும்.
வியாபார நிலையங்களை அருகில் கொண்டுள்ள, இங்கு சுட்டிக் காட்டப்படும் குப்பை கொட்டப்பட்டுள்ள இடம் தொடர்பில் வர்த்தக சங்கம் கூட கவனமெடுக்கவில்லை என்பது நோக்கத்தக்கது.
நகரின் தூய்மையை பேணுவதற்கு அதனுடன் தொடர்புபட்ட அத்தனை துறைசார் உத்தியோகத்தர்களும் பொது மக்களும் இணைந்து செயலாற்ற வேண்டும்.
அப்போது இப்படியான முகம் சுழிக்க வைக்கும் குப்பை மேடுகளை இல்லாது செய்து விடலாம் என்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.