அபுதாபி ஜாயித் சர்வதேச விமான நிலையத்தில் (Zayed International Airport) இருந்து டெல்லியை (Delhi) நோக்கி புறப்பட்ட விமானமொன்று பயணத்தின் சில நிமிடங்களிலேயே திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, விமானிகள் மஸ்கட் சர்வதேச விமான நிலையத்தில் (Muscat International Airport) அவசரமாக தரையிறக்க அனுமதி கோரி நிலையில் அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு இண்டிகோ (IndiGo) விமானத்தை மஸ்கட்டில் தரையிறக்க அனுமதி வழங்கப்பட்டது.
தொழில்நுட்ப கோளாறு
குறித்த விமானம் அங்கு தரையிறக்கப்பட்ட பின்னர், பயணிகள் அனைவரும் மஸ்கட்டில் உள்ள உணவகங்களில் தங்க வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர்களுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படும் எனவும் பயணிகளுக்கு இடையூறு மற்றும் தடங்கல் ஏற்பட்டதற்கு வருந்துவதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட விமானம் மஸ்கட்டில் தேவையான பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததும் மீண்டும் வானில் பறக்க அனுமதிக்கப்படும் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.