எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 30 ஆந் திகதி சர்வதேச
காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு
தாருங்கள் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அம்பாறை மாவட்ட சங்கத்
தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்துள்ளார்.
கல்முனை ஊடக
மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,எதிர்வரும் 30
ஆம் திகதி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் சர்வதேச
காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
கவனயீர்ப்பு போராட்டம்
இந்தநிலையில், பேரணியானது வடக்கில்
சங்கிலியன் சிலையிலிருந்து தொடங்கி செம்மணி வரை நிறைவடைந்து
அவ்விடத்தில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
அதே போன்று
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதே நாளில் கல்லடி பாலத்தில் இருந்து போராட்டம்
ஆரம்பித்து காந்தி பூங்கா வரை ஊர்தி ஊர்வலத்துடன் சென்று கவனயீர்ப்பு
போராட்டம் காந்தி பூங்காவில் முன்னால் இடம் பெறும்.
ஆதரவு
எனவே கடந்த காலத்தில் பல தரப்பினராலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட
உறவுகளின் உண்மை நிலையை உலகிற்கு எடுத்து கூறி சர்வதேச பொறிமுறை ஊடாக
அதற்கான தீர்வுகளை பெற்று கொள்ளும் நோக்கத்துடன் இப்போராட்டத்தை நாங்கள்
முன்னெடுக்க இருக்கின்றோம்.
இந்த போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.