Courtesy: Roshan
புதிய இணைப்பு
திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட போராட்டத்தில் பொலிஸாருக்கும் ஆர்பாட்டக்காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக பெரும் பதற்றமான சூழ் நிலை நிலவுகிறது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக திருகோணமலை பொலிஸ் நிலையம் முன்பாக பெருந்திரளான மக்கள் கூடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முதலாம் இணைப்பு
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தினத்தத்தை முன்னிட்டு இன்றைய தினம் வடக்கு கிழக்கில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில் இன்று (30) காலை போராட்டம் ஆரம்பமானது.
இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்பில் இருந்து சென்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் சென்ற பேருந்தை வெருகல் பகுதியில் உள்ள பொலிஸார் தடுத்து நிறுத்தி திருகோணமலைக்கு செல்ல முடியாது என தெரிவித்து சென்றவர்களை அச்சுறுத்தியுள்ளனர்.
பொலிஸாருடன் வாக்குவாதம்
காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் உறவினர்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இறுதியில் அப்பகுதியில் இருந்து திருகோணமலை செல்வதற்கு பொலிஸார் அனுமதி வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், வடக்கு கிழக்கு முழுவதும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக கிளிநொச்சியில் சர்வதேச காணாமல் ஆக்கபட்டோர் தினத்தை முன்னிட்டு
இன்று (30) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கந்தசாமி கோயில் முன்றலில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகிய
போராட்டம் கிளிநொச்சி டிப்போச் சந்திக்கு அண்மித்த பகுதியில் உள்ள
மீனாட்சியம்மன் கோயில் நிறைவு பெற்றது.
மேலதிக தகவல் – யது
யாழ்ப்பாணம்
சர்வதேச நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மாபெரும் போராட்ட பேரணியொன்றை யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஆரம்பித்துள்ளனர்.
இதற்கமைய வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இந்த மாபெரும் போராட்டத்தை யாழில் முன்னெடுத்துள்ளனர்.
யாழ் ஆரியகுளம் சந்தியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்ட பேரணி யாழ் நகரைச் சுற்றி வந்து நிறைவடையவுள்ளது.
செய்தி – தீபன்
அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது தினமானது இன்றையதினம் சர்வதேச
ரீதியாக அனுஷ்டிக்கப்படுகிறது.
அந்தவகையில் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திற்கு முன்னால், காணாமல் ஆக்கப்பட்ட
உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம் ஒன்று இன்று மதியம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டமானது யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்
முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தி, வாய்களை கறுப்பு துணியால் கட்டி
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி – கஜிந்தன்