பிரித்தானியாவில் காவல்துறை வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணி பெண் மற்றும் கருவிலிருந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்துச் சம்பவமானது கடந்த வியாழக்கிழமை(17) மாலை எல்தம்(Eltham) பகுதியில் கிட்புரூக் பார்க் சாலையுடன்(Kidbrooke Park Road) இணையும் A20 சாலை சந்திக்கு அருகே இடம்பெற்றுள்ளது.
விபத்துச் சம்பவம்
இதன்போது, தென்கிழக்கு லண்டனில் உள்ள காவல்துறை வாகனமொன்றே விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் அந்த காவல்துறை தொடர்பான விபரம் வெளியிடப்படவில்லை.
விபத்தினையடுத்து, லண்டன் நோயாளர்காவு சேவை மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த போதிலும், 38 வயதான கர்ப்பிணி பெண் மற்றும் கருவிலிருந்த குழந்தையும் முன்னரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், இந்த விபத்துக்கு முக்கிய காரணமான குறிப்பிடப்படாத காவல்துறை வாகனம் அவசர நிலைக்கு பதிலளித்துக் கொண்டிருந்ததா என்பது இதுவரை தெளிவாக குறிப்பிடப்படவில்லை.
விபத்து தொடர்பான விசாரணை
விபத்தினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தலைமை துப்பறியும் கண்காணிப்பாளர் Trevor Lawry, “விபத்து தொடர்பாக சுயாதீன காவல்துறை நடத்தை அலுவலகம்(IOPC) மற்றும் மெட் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பான விசாரணையில் அனைத்து வகையான ஒத்துழைப்பும் வழங்கப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விபத்துக்கு முக்கிய காரணமாக இருந்த காவல்துறை வாகனத்தில் இருந்த இரண்டு அதிகாரிகள் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.