ஆசிரியர் உதவியாளர் போட்டி பரீட்சைக்கான தடை உத்தரவை எதிர்வரும் 17ஆம்
திகதிக்கு முன்னர் ஜனாதிபதியின் தலையிட்டால் மீள பெறப்பட்டால் மட்டுமே
திட்டமிட்டபடி பரீட்சைகள் நடைபெற வாய்ப்பு இருக்கிறது என முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதியின் தலையீட்டால் ஆசிரிய உதவியாளர் போட்டி பரீட்சைக்கான தடை உத்தரவு
மீள பெறப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஊடகங்களுக்கு
தெரிவித்திருந்தார்.
ஆசிரியர் நியமனங்கள்
பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு ஆசிரியர் நியமனங்கள்
வழங்கப்படுகின்ற சந்தர்ப்பங்களில் நீதிமன்றத்தை நாடி தடை உத்தரவு பெற்றது இது
இரண்டாவது முறையாகும்.
வரலாற்றில் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஒவ்வொரு சமூகமும் தமது கல்விக்காக
பல்வேறு சலுகைகளின் அடிப்படையில் ஆசிரியர் நியமனங்களை பெற்றிருக்கின்றன.
அல்ராஜ் பதியுதீன் மஹ்மூத் கல்வி அமைச்சராக இருந்தபோது எட்டாம் தரத்தில்
சித்தி அடைந்த முஸ்லிம்களுக்கு ஆசிரியர் நியமனங்களை பெற்றுக் கொடுத்தார்.
அதேபோல சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் சாதாரண தர தகைமையுடன் ஆசிரியர்
நியமனங்களை பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு பெற்றுக் கொடுத்தார்.
இவ்வாறு சமூக
நலனின் அடிப்படையில் கடந்த காலங்களில் ஆசிரிய நியமனங்கள்
வழங்கப்பட்டிருக்கின்றன.
சட்ட ஆலோசனைகள்
சகோதர சமூகங்கள் புரிந்துணர்வின் அடிப்படையில் இவற்றை
நோக்க வேண்டும். எவ்வாறினும் பெருந்தோட்ட பிரதேச ஆசிரியர் உதவியாளர் விண்ணப்பதாரிகளுக்கு
உதவும் நோக்கத்தில் நாம் சட்ட ஆலோசனைகளை பெற்று வருகிறோம்.
மலையகத்தை சார்ந்த
சட்ட வல்லுநர்கள் ஆசிரியர் உதவியாளர் விண்ணப்பத்தாரிகளின் நலன் கருதி உதவ
வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
அதே நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல்
சுரேஷ் கூறுவது போல எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதியின்
தலையீட்டில் இதற்கு ஒரு முடிவு காண வேண்டும்.
அல்லது நாம் இந்த விடயத்தை
சட்டரீதியாக எதிர்கொள்வதற்கு தயாரிப்புகளை மேற்கொண்டு வருகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.