பதுளை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்புநிலைக்கு
கொண்டுவர அரசு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின்
மீள்குடியேற்றம் மற்றும் சேதமடைந்த உட்கட்டமைப்புகளை சரிசெய்வதற்கான பணிகள்
துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
நிதி குறைபாடு
ஊவா மாகாண நூலக அரங்கில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில்
பேசிய அவர், தேவையான நிதியில் குறைபாடு இல்லையெனவும், ஒவ்வொரு அமைப்பும்
பொறுப்புடன் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பதுளை மாவட்டத்தில் 64,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; 418
வீடுகள் முழுமையாகவும் 7,700-க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவில்
சேதமடைந்துள்ளன.
இந்த நிலையில் வீதிகள்; மின்சாரம், குடிநீர், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட
அவசிய சேவைகளை விரைவில் புனரமைக்கவும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கு உதவித்தொகை
பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 25000 ரூபாய் உதவித் தொகை விரைவில்
வழங்கப்பட வேண்டும் என்றும், சேதமடைந்த விவசாய நிலங்களுக்கு நஷ்டஈடு வழங்கி
விவசாயிகளை மீண்டும் விவசாயத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி
அறிவுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில் அனர்த்தம் மற்றும் புனரமைப்புக்களுக்காக வழங்கப்படும் பணத்தை
திருப்பியனுப்பவேண்டாம் என்று ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு பணிப்புரை
விடுத்துள்ளார்.

