மோசடி வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு
வழங்கப்பட்டமை தொடர்பில், சிறைச்சாலைகள் திணைக்களம் தெளிவுப்படுத்தியுள்ளது.
நிதி நிறுவனம் ஒன்றின் முன்னாள் மேலாளரான டபிள்யூ.எம். அதுல திலகரத்ன 4
மில்லியன் பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்று
வந்ததாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது
இந்தநிலையில், குறிப்பிட்ட தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்யும் கைதிகளுக்கு
வழங்கப்படும் வருடாந்த வெசாக் போயா தின பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட
கைதிகள் குழுவில் திலகரத்னவும் ஒருவராக இருந்தார் என்று சிறைச்சாலைகள்
பேச்சாளர்; காமினி பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார். திலகரத்ன தனித்து, பொதுமன்னிப்பில் கீழ் விடுவிக்கப்படவில்லை.
எனினும், அவரது தண்டனை அமைப்பு மற்றும் அபராதத்தை குறைத்தல் காரணமாக பொது
வழிகாட்டுதல்களின் கீழ் அவர் பொதுமன்னிப்புக்கு தகுதி பெற்றுள்ளார் என்று
திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இழப்பீடு
அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தால், அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு
இழப்பீடாக செலுத்த வேண்டிய 2 மில்லியன் அபராதத்துடன் இடைநிறுத்தப்பட்ட
சிறைத்தண்டனை உத்தரவையும் பெற்றிருந்தார்.

அபராதத்தை செலுத்தத் தவறினால் ஆறு மாதங்கள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இருப்பினும், வெசாக் மன்னிப்பின் கீழ், அவருடைய அபராதம் தள்ளுபடி
செய்யப்பட்டது.
இதனால் அவர் விடுவிக்கப்பட்டார் என்று சிறைச்சாலைகள்
திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா,
குறித்த விடயத்தில், ஜனாதிபதியின் மன்னிப்பை கேள்விக்குள்ளாக்கி,
நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்தநிலையில், இந்த விடுதலை நிலையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றியது என்றும்
விதிவிலக்கான அல்லது அரசியல் நோக்கம் கொண்டதல்ல என்றும் சிறைச்சாலைகள்
திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

