ஜனாதிபதித் தேர்தல் பணிகளுக்காக இம்முறை இரண்டு இலட்சம் வரையிலான அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடவுள்ளனர். நாடளாவிய ரீதியில் 13 ஆயிரம் வாக்களிப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான சகல பணிகளும் நிறைவுபெற்றுள்ளன. தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டு பத்திரங்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி திங்கட்கிழமை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகங்களுக்கு ஒப்படைக்கப்படும்.
தபால் மூல வாக்களிப்பு
இதற்கமைய செப்டெம்பர் மாதம் 4, 5, 6 ஆகிய திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் பின்வருமாறு கருத்து தெரிவித்தார்…
“தேர்தல் கடமைகளில் நேரடியாக ஈடுபடும் மாவட்ட செயலக காரியாலயம், காவல்துறை திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு ஆகிய அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் எதிர்வரும் மாதம் 4 ஆம் திகதி தபால் மூலமாக வாக்களிக்க முடியும்.
2 இலட்சம் அரச ஊழியர்கள் கடமையில்
ஏனைய அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் செப்டெம்பர் மாதம் 5, 6 ஆகிய திகதிகளில் வாக்களிக்க முடியும். இவ்விரு தினங்களில் வாக்களிக்காதவர்கள் 11, 12 ஆகிய திகதிகளில் வாக்களிக்க முடியும்.
ஜனாதிபதி தேர்தல் பணிகளுக்காக இம்முறை சுமார் 2 இலட்சம் அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடவுள்ளனர். நாடளாவிய ரீதியில் 13 ஆயிரம் வாக்களிப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்படும். வாக்களிப்பு முறைமை குறித்து வாக்காளருக்கு விளக்கமளிக்கப்படும்.”