ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது போன்ற ஒரு முட்டாள் தனமான செயற்பாடு வேறு எதுவுமில்லை என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்(M.A.Sumanthiran) தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தமிழ் மக்களுக்கு பாதகமான விளைவு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளரைக் களமிறக்குவது அநாவசியமானது மாத்திரமல்ல, இது தமிழ் மக்களுக்கு மிகப் பாதகமான விளைவை ஏற்படுத்தும் என்பதையும் நான் தொடர்ச்சியாக கூறிவருகின்றேன்.
தற்போதைய கள நிலவரத்தை ஒத்த சூழ்நிலையில்தான் நாம் எமது மக்களின் வாக்குப் பலத்தைப் பிரயோகித்து அடையப்படவேண்டிய விடயங்களை அடைந்து கொள்ள வேண்டும்.
ஆயுதம் இல்லாத தற்போதைய சூழலில் வாக்குப்பலம் தான் எம்முடைய ஆயுதம். அதனைத் தகுந்த சமயத்தில் பயன்படுத்தாமல் எங்கேயோ கொண்டுசென்று ஒழித்து வைப்பதை ஒத்ததாகவே தமிழ்ப் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் செயற்பாடு இருக்கின்றது.
இதனைவிட முட்டாள்தனமான செயற்பாடு வேறு எதுவுமில்லை.
பிரதான தமிழ் அரசியல் கட்சியான நாம் ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திவருகின்றோம்.
அவ்வாறிருக்கையில் எமது கட்சியை உள்ளடக்காத தரப்பினர் இணைந்து தமிழ் பொதுக்கட்டமைப்பு எனத் தம்மைத்தாமே அடையாளப்படுத்தி அவர்கள் மத்தியில் பொது வேட்பாளர் ஒருவரை பொதுவேட்பாளராக நிறுத்துவது முற்றிலும் கேலிக் கூத்தான விடயமாகும்.
இது வெறும் கேலிக்கூத்து என்றால் நாமும் பார்த்து சிரித்துவிட்டு இருக்கலாம். ஆனால் இது அவ்வாறான விடயம் அல்ல. மாறாக 75 வருடகாலமாக தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்ற எமது மக்களின் அபிலாஷைகளை முற்று முழுதாகக் குழிதோண்டிப் புதைக்கின்ற செயலாகும்.
அரிநேத்திரன் ஏன் களமிறங்கினார்…
ஆகையினாலேயே நான் இதனைக் கடுமையாக எதிர்க்கின்றேன். எமது மக்களும் இதனைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
தற்போது தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ன நோகத்திற்காக களமிறக்கப்படுகின்றார் என யாருக்கும் தெரியவில்லை. அண்மையில் நேர்காணலொன்றில் பங்கேற்ற அரியநேத்திரன், அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் என்ன உள்ளடங்கப் போகின்றது எனத் தனக்குத் தெரியாது என்கின்றார்.
அவ்வாறெனில் அவர் எதற்கான பொது வேட்பாளராகக் களமிறங்கினார்? சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வே தமிழ் மக்களுக்கான அர்த்தமுள்ள அரசியல் தீர்வென மறுப்பின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது.
அவ்வாறிருக்கையில் இவ்வாறு பொது வேட்பாளரைக் களமிறக்கி, அவர் குறைந்த அளவிலான வாக்குகளைப் பெறும்போது, தமிழ் மக்களே மேற்குறிப்பிட்ட தீர்வை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற கருத்து முன்வைக்கப்படும்.
இது ஒரு விஷப் பரீட்சை என எமது கட்சியின் தலைவர் குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும் என்னைப் பொறுத்தமட்டில் இது பரீட்சையே அல்ல. தோடல்வியடையப் போவதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு மேற்கொள்ளும் முட்டாள் தனமான நகர்வே இதுவாகும்.
அதேவேளை, பொது வேட்பாளர் எமது கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.
அதற்கமைய இது குறித்து அவரிடம் விளக்கம் கோரப்பட்டிருக்கின்றது. அதேபோன்று கட்சியின் எந்தவொரு சுட்டத்திலும் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.