சிறிமாவோ பண்டாரநாயக்க பாடசாலையின் விருது வழங்கல் நிகழ்வின் போது ஏற்பட்ட சர்ச்சை தொடர்பில் அதன் அதிபர் சுமேதா ஜயவீர விளக்கம் அளித்துள்ளார்.
கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவவினால், விசாரணைக்காக பாடசாலை அதிபர் அழைக்கப்பட்டிருந்தார்.
கடந்த 22ஆம் திகதி கல்வியமைச்சில் இடம்பெற்ற விசாரணையின் போது, பல தகவல்களை அதிபர் வெளியிட்டுள்ளார்.
விருது விழா
இதன்போது, 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளுக்கான விருதுகள் வழங்கப்பட்ட விதம் குறித்து அதிபர் விளக்கமளித்துள்ளார்.

ஏழு வருடங்களின் பின்னர் நடந்தப்பட்ட “சிறந்த வீராங்கனை” விருது விழாவில் ஒரு வீராங்கனைக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படுவதால், கடுமையான நிபந்தனைகள் பின்பற்றப்பட்டதாக அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெறுதல், தேசிய சாதனை படைத்தல் அல்லது சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட வெற்றியினைப் பெறுதல் போன்ற தகுதிகள் குறித்து மாணவிகளுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இது குறித்த சர்ச்சையை ஏற்படுத்திய குவாஷ் (Squash) வீராங்கனை சனித்மா சினாலி தற்போது பழைய மாணவி எனவும், அவர் மேடையில் நடந்து கொண்ட விதம் பாடசாலையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாக அமைந்ததோடு, எதிர்கால சந்ததியினருக்கு தவறான முன்மாதிரியாகவும் அமைந்துள்ளதாகவும் அதிபர் சுட்டிக்காட்டினார்.
சனித்மா சினாலிக்கு விருது வழங்கப்படாமைக்கு அவர் பயிற்சியில் கலந்து கொள்ளாதது காரணம் அல்ல, மாறாக அதற்கான தகுதிகள் பூர்த்தி செய்யப்படாமையே காரணமாகும்.
எனினும் அவருக்கு ஏனைய நிறங்கள் மற்றும் விசேட விருதுகள் வழங்கப்பட்டதாகவும் அதிபர் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணை
இம்முறை சிறந்த வீராங்கனை விருதை வென்ற நபாஷி பெரேரா, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல வெற்றிகளைப் பெற்ற திறமையான நீச்சல் வீராங்கனை என்பதை அதிபர் இதன்போது உறுதிப்படுத்தினார்.

பெற்றோர்களுக்கான விளக்கமளிக்கும் கூட்டத்தில் எவ்வித ஆட்சேபனைகளும் முன்வைக்கப்படாத நிலையில், விழாவின் போது இவ்வாறானதொரு சூழல் உருவானது ஏற்கத்தக்கதல்ல என அதிபர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, பாடசாலை அதிபரிடம் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், விருது வழங்கப்பட்ட விதம் தொடர்பான முழுமையான அறிக்கையை விரைவாக சமர்ப்பிக்குமாறு கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

