பூசா சிறைச்சாலையில் கைதிகளை மாற்ற முற்பட்டபோது இடம்பெற்ற மோதலில் சிறைச்சாலை அத்தியட்சகர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
பூசா சிறைச்சாலையில் உள்ள கைதிகள் சிலரை அவர்கள் தங்கியிருக்கும் சிறை அறைகளிலிருந்து வேறு சிறை அறைகளுக்கு மாற்ற முற்பட்டபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இடமாற்றங்களுக்குக் கைதிகள் எதிர்ப்பு
இந்த இடமாற்றங்களுக்குக் கைதிகள் எதிர்ப்புத் தெரிவித்ததுடன் இதன்போது கைதிகள் நடத்திய தாக்குதலில் சிறைச்சாலை அத்தியட்சகர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறைச்சாலை அத்தியட்சகரின் மூக்கில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும், தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொலைபேசிகள் மீட்பு
இதேவேளை பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் இருந்து 2 ஸ்மார்ட் தொலைபேசிகள், 13 சிம் கார்டுகள் மற்றும் பிற பொருட்கள் உட்பட ஏராளமான கைபேசி பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சிறப்பு அதிரடிப்படை (STF) தெரிவித்துள்ளது.

பூஸா முகாமின் அதிகாரிகள், காலி சிறப்பு அதிரடிப் படை அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டிருந்தனர்.

