புதிய இணைப்பு
சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரான இராமநாதன் அர்ச்சுனா தற்போது வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் விசேட பேச்சுவார்த்தைக்காக அளிக்கப்பட்டுள்ள நிலையிலும், சுகயீன விடுமுறையின் காரணமாகவும் அவர் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி – தீபன்
மூன்றாம் இணைப்பு
சாவகச்சேரியில் கூடும் பொதுமக்களை அடித்து விரட்ட பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அரச நிர்வாக நடைமுறைகளுக்கு எதிராக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்திய பொறுப்பதிகாரி செயற்பட்டு வருவதாக தெரிவித்து அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகி்ன்றன.
இன்றைய தினம் குறித்த வைத்திய அதிகாரி மருத்துவ விடுமுறை எடுத்து வைத்தியசாலையில் மருத்துர்களுக்கு ஒதுக்கப்பட்ட விடுதியில் தங்கியுள்ளார்.
அவரை பொலிஸார் கைது செய்ய ஆயத்தமாகும் வேளையில் பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முற்படுவார்கள் என்ற காரணத்தால் குறித்த பகுதியில் கலகம் அடக்கும் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது
இரண்டாம் இணைப்பு
யாழ். (Jaffna) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் போராட்டக்காரர்கள் தற்போது ஏ 9வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அவ்விடத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் போராட்டக்களத்திற்கு பொலிஸார் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர் வரவளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக தகவல்: கஜி
முதலாம் இணைப்பு
யாழ். (Jaffna) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக தென்மராட்சி மக்களால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமும் கடை அடைப்பு நடவடிக்கையும் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை தீர்த்து வைத்தியசாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க வேண்டும் என கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கடை அடைப்பு
அதேவேளை, பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனா சுகவீன
விடுமுறையில் இருப்பதாகவும் இன்று வைத்தியசாலைக்கு சேவைக்கு செல்ல போவதில்லை எனவும் தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதுடன் மக்கள் அணிதிரண்டு அமைதியான வழியில் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அப்பகுதியில் பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு ஆதரவளித்து இன்று (08.07.2024) போராட்டம் முன்னெடுக்க தீர்மானித்திருந்த நிலையில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் பொலிஸாரின் நடவடிக்கைகள் காரணமாக நேற்று இரவு 8 மணியளவிலேயே மேற்படி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
வைத்தியர் அர்ச்சுனாவிற்கான இடமாற்றக் கடிதத்தை இரவு வேளையில் வைத்து வழங்க முற்பட்டமை மற்றும் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டமையினால் சுமார் 400 பொதுமக்கள் ஒன்றுகூடி வைத்தியசாலை முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனால் பொலிஸார் குவிக்கப்பட்டு அவ்விடத்தில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த போராட்டத்துடன் தற்போது கடையடைப்பும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும், பின்வரும் அமைப்புக்கள் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.
1.சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் கழகம்.
2.கொடிகாமம் வர்த்தக சங்கம்.
3.தனியார் சிற்றூர்திச் சேவைச் சங்கம் தென்மராட்சி.
4.முச்சக்கரவண்டிச் சங்கம் சாவகச்சேரி.
5.முச்சக்கர வண்டிச் சங்கம் கொடிகாமம்.
6.முச்சக்கர வண்டிச் சங்கம் கைதடி.
7.தனியார் கல்வி நிலையங்களின் ஒன்றியம் தென்மராட்சி.
8.கடற்றொழில் சங்கம் கச்சாய்.
9.லிகோரியார் கடற்றொழில் சங்கம் சாவகச்சேரி
10.சிகையலங்கரிப்பாளர் சங்கம் தென்மராட்சி.
11.சலவைத் தொழிலாளர் சமாசம் தென்மராட்சி.
12.சனசமூக நிலையங்களின் ஒன்றியம் தென்மராட்சி.
13.கிராம அபிவிருத்திச் சங்கங்களின் சமாசம் தென்மராட்சி.
14.மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் ஒன்றியம்.
15.பனை,தென்னை கூட்டுறவுச் சங்க தொழிலாளர்களின் சமாசம்.
16.கமக்காரர் அமைப்புக்களின் ஒன்றியம் தென்மராட்சி.
17.சிறுதொழில் முயற்சியாளர் ஒன்றியம் தென்மராட்சி.
18.குடிசைக் கைத்தொழில் மேம்பாட்டு இணையம் தென்மராட்சி.
19.சந்தை வியாபாரிகள் சங்கம் சாவகச்சேரி.
20.சந்தை வியாபாரிகள் சங்கம் கொடிகாமம்.
21.நகர வரியிறுப்பாளர் ஒன்றியம் சாவகச்சேரி.
22.மீன் சந்தை வியாபாரிகள் ஒன்றியம் சாவகச்சேரி.
23.மின்னியலாளர் சமாசம் சாவகச்சேரி.
24.இளைஞர் கழகங்களின் சம்மேளனம் தென்மராட்சி.
25.விளையாட்டுக் கழகங்களின் சமாசம் தென்மராட்சி.
26.கால்நடை வளர்ப்பாளர் கூட்டுறவுறவுச் சங்கம் தென்மராட்சி.
27.தனியார் பேக்கரி உற்பத்தியாளர் சங்கம்.
தென்மராட்சிக் கிளை.
28.உணவக உரிமையாளர் சங்கம் சாவகச்சேரி.
29.முன்பள்ளி ஆசிரியர்கள் இணையம் தென்மராட்சி.
30.உள்ளூர் பழ,மர உற்பத்தியாளர் சங்கம் கொடிகாமம்.