இலங்கை நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் (www.parliament.lk), கடந்த
19 வருட சேவையில் மூன்றாவது தடவையாக, புதிய அம்சங்களுடன் நவீனமயமாக்கப்பட்டு
அண்மையில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் அங்குரார்ப்பணம்
செய்யப்பட்டது.
தேசிய ஜனநாயக நிறுவகத்தின் (NDI) முழுமையான அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட
இந்தச் சீரமைப்பு, மேம்படுத்தப்பட்ட அணுகல் மற்றும் நவீன தேவைகளைப் பூர்த்தி
செய்யும் பல புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
எனது நாடாளுமன்றம்
இதில் முக்கியமாக, “எனது நாடாளுமன்றம்” (“My Parliament”) என்ற புதிய பகுதி
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒவ்வொரு பிரஜையும் நாடாளுமன்றத்துடனும், நாடாளுமன்ற
உறுப்பினர்களுடனும் நேரடியாக தொடர்புகொள்ள முடியும்.
பொதுமக்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலம் நாடாளுமன்றத்தினால்
வழங்கப்படும் சேவைகளை எளிதாக அணுகும் வாய்ப்பைப் பெறுவார்கள் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

