முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதிகளில் ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும், தமிழர்களின் பூர்வீக விவசாய நிலங்களுக்குச்செல்லும் வீதி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளமையால் குறித்த வீதியை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரடியாகச்சென்று பார்வையிட்டுள்ளார்.
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கமநலசேவை நிலைய பிரிவில்
பொரும்பான்மையினத்தவர்களின் ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும், அக்கரைவெளி, எரிஞ்சகாடு,
நாயடிச்சமுறிப்பு, பாலங்காடு உள்ளிட்ட வயல் நிலங்களுக்குச்செல்லும் வீதியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது.
இதன்போது முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளருடன்
தொடர்புகொண்டு குறித்த வீதியை மிக விரைவாக சீரமைப்புச்செய்யுமாறும்
வலியுறுத்தியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து
இந்த வீதியை பார்வையிட்டபின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
சுமார் 2000 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல் நிலங்களில் நெற்பயிற்செய்கை
மேற்கொள்ளும் விவசாயிகள் இந்த வீதியைப் பயன்படுத்துகின்றனர்.
அந்தவகையில் இந்தவீதியால் விவசாய உள்ளீடுகளை கொண்டுசெல்வதிலும், நெல்அறுவடைகளை
எடுத்துச்செல்வதிலும் விவசாயிகள் பல்வேறு இடர்பாடுகளுக்கு
முகங்கொடுத்துவருகின்றனர்.
விவசாய நிலங்கள்
அதேவேளை குறித்த விவசாய நிலங்கள் தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்கள்
என்பதுடன், பெரும்பான்மையினத்தவர்களின் ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும்
விவசாய நிலங்களாகும்.
எனவே குறித்த விவசாய நிலங்களுக்குச் செல்லும் இந்த வீதியை சீரமைப்பு செய்வது
மிகவும் அவசியமானது” என்றார்.