இலங்கை வர்த்தக சபைகளின் உலகளாவிய சம்மேளனமானது தனது முதலாவது வருடாந்த
பொதுக் கூட்டத்தை கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் அண்மையில் நடத்தியது.
இந்தக் கூட்டமானது உலகளாவிய ரீதியிலுள்ள இலங்கை வர்த்தக சமூகங்களை
ஒன்றிணைப்பதில் வரலாற்று ரீதியான மைல் கல்லொன்றைக் குறிப்பதாக உள்ளது.
பிரதிநிதிகளை இணைக்கும் நிகழ்வு
இது இலங்கையின் முக்கியத்துவம் மிக்க வர்த்தகத் தலைவர்கள், தொழில்
முயற்சியாளர்கள், தொழில் வல்லுனர்கள், சர்வதேச பிரதிநிதிகள் ஆகியோருடன்
உலகளாவிய வர்த்தக சபைகளிலிருந்தான பிரதிநிதிகளை இணைக்கும் முக்கியத்துவம்
மிக்க நிகழ்வாக அமைந்தது.
இந்த வருடாந்த பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வெளி
விவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் கலந்து கொண்டிருந்த நிலையில் இது உலக
பொருளாதார ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை கோடிட்டுக்காட்டுவதாக உள்ளது.
அத்துடன் இந்த நிகழ்வில் ஜப்பான் இலங்கை வர்த்தக சபையை
பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் செயலாளர் நாயமாக சஜீவ் ராஜபுத்திர
நியமிக்கப்பட்டமை இந்த கூட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாக அமைந்தது.
குலா செல்லத்துரையின் நியமனம்
அதேசமயம்
கனடா இலங்கை வர்த்தக சமவாயத்தின் தலைவர் குலா செல்லத்துரை, உப செயலாளர்
நாயகமாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்கா, ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த
அநேக பிரசித்தி பெற்ற தலைவர்கள் மேற்படி சம்மேளன நிறைவேற்று சபைக்கு
நியமிக்கப்பட்டனர்.
இலங்கையின் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் சர்வதேச வர்த்தக சபைகளுக்குமான
முதலாவது இணைந்த மேடையொன்றின் ஆரம்பத்துக்கான வரலாற்று முக்கியத்துவம் மிக்க
சமிக்ஞையாக இந்த மாநாடு அமைந்தது.
இந்த சம்மேளனமானது எல்லை கடந்த வர்த்தகம், முதலீடு, புத்துருவாக்கம், கொள்கை
ஆலோசனை என்பவற்றுடன் உலகளாவிய ரீதியில் இலங்கையின் பொருளாதார காலடித்தடத்தை
வலுப்படுத்துவதை நோக்காகக் கொண்டுள்ளது.