கனேமுல்ல – கலஹிடியாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து உரிமையை உறுதிப்படுத்த முடியாத மூன்று சொகுசு ஜீப் வண்டிகள் மற்றும் வெகன் ஆர் கார் ஒன்றை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
மீட்கப்பட்ட வாகனங்களின் பெறுமதி 120 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமென காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், ராகம, படுவத்த பகுதியில் உள்ள காவல்துறை வீதித்தடையில் பென்ஸ் கார் ஒன்றை காவல்துறையினர் சோதனையிட முயன்றபோது, காவல்துறை அதிகாரிகளை மோசமான வார்த்தைகளால் திட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வீடு சோதனை
இந்தநிலையில், தப்பிச் செல்லும் போது வாகனத்தை செலுத்திய நபர் குடிபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கனேமுல்ல – கலஹிடியாவ பகுதியில் குறித்த பென்ஸ் கார் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அங்குள்ள ஒரு வீட்டை சோதனை செய்ததில் உரிமையை உறுதிப்படுத்த முடியாத வாகனங்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, வீடு சோதனையின் போது அத்துமீறி நடந்து கொண்ட வீட்டு உரிமையாளர், அவரது மனைவி மற்றும் வாகன சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, அவர்கள் வத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஜனவரி 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.