எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டிற்காக குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பையை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
பொருட்களின் விலை
அதன்போது, சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும், அந்தப் பொருட்களின் விலைகளைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்ற இறக்கங்களை குறைந்தபட்ச அளவில் பராமரிப்பது மற்றும் வெதுப்பக பொருட்களின் விலைகளைக் குறைப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடு
அத்தோடு, மானிய விலையில் நுகர்வோருக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக கூட்டுறவு மற்றும் சதோச வலையமைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் பண்டிகைக் காலத்தில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மானிய விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்க ரூ. 1 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த ஒதுக்கீட்டை முறையாகப் பயன்படுத்துவது குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.