பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான தகவல்களை இணையத்தில்
வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அரசியல்வாதியும், சமூக ஊடக ஆர்வலருமான கெலும் ஜயசுமணவை எதிர்வரும் 4 ஆம் திகதி
வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பாக, உண்மைக்குப்
புறம்பான பிரசாரங்களை மேற்கொண்டு பொதுமக்கள் மத்தியில் அமைதியற்ற சூழலை
ஏற்படுத்த முற்பட்ட குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று
பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி அவர் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் விளைவித்ததாகக்
குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கெலும் ஜயசுமண
இந்நிலையில், நேற்று அதிகாலை கைது செய்யப்பட்ட கெலும் ஜயசுமண, கொழும்பு கோட்டை கணினி
குற்றப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
அநுர அரசு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவோம் எனக் கூறி ஆட்சிக்கு
வந்துள்ள நிலையில், மாவீரர் நாள் பதிவுகள் தொடர்பில் பயங்கரவாதத் தடைச்
சட்டத்தின் கீழ் சுன்னாகம், மருதானை மற்றும் பத்தேகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்த
மூவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கெலும் ஜயசுமண நாலாவதாகக் கைது
செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.