இலங்கை வீட்டு வசதி அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபன வங்கி மற்றும் அரச ஈட்டு
மற்றும் முதலீட்டு வங்கி ஆகியவற்றை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுக்கு
அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும், வைப்பாளர்களின் நலன்களைப்
பாதுகாப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பங்குகள் மாற்றம்
இலங்கை வீட்டு வசதி அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபன வங்கியின் அரசாங்கப்
பங்குகள் அனைத்தும் இலங்கை வங்கிக்கு மாற்றப்படும்.
இதன் மூலம், குறித்த வங்கி இனி இலங்கை வங்கியின் யின் துணை நிறுவனமாகச்
செயற்படும்.

அத்துடன் அரச ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கியின் அனைத்துப் பங்குகளும் மக்கள்
வங்கியால் கையகப்படுத்தப்படும்.
அதனை தொடர்ந்து குறித்த மக்கள் வங்கியின் துணை நிறுவனமாக இயங்கும்.
இந்த இரண்டு நிறுவனங்களும் வீடமைப்பு தொடர்பான நிதிச் சேவைகளை வழங்கும்
சிறப்பு வாய்ந்த வங்கிகளாகும்.
எனினும், வரையறுக்கப்பட்ட வைப்புத் திரட்டும் திறன், பலவீனமான இலாபத்தன்மை
மற்றும் போதுமான மூலதன தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறியமை போன்ற காரணங்களால்
அவற்றின் நிலைத்தன்மையைப் பேணுவதில் சிரமங்களை எதிர்கொண்டதாக இலங்கை மத்திய
வங்கி தெரிவித்துள்ளது.
கொழும்புப் பங்குச் சந்தை
இலங்கை வீட்டு வசதி அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபன வங்கி 1997 ஆம் ஆண்டு இல. 7
சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டதுடன் கொழும்புப் பங்குச் சந்தையில்
பட்டியலிடப்பட்டுள்ளது.

அரச ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கி 1975 ஆம் ஆண்டு இல. 13 சட்டத்தின் கீழ்
உருவாக்கப்பட்டதுடன் முழுமையாக அரசாங்கத்திற்குச் சொந்தமானது.
இந்த மறுசீரமைப்பு, சிறிய வங்கிகளை வலுவான அரச வங்கிகளுடன் ஒருங்கிணைப்பதன்
மூலம் நீண்டகால வங்கித் துறை ஸ்திரத்தன்மையை ஆதரிப்பதுடன் வைப்பாளர்களுக்கு
மேம்பட்ட பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

