நுவரெலியாவில்(Nuwara Eliya) உள்ள இலங்கை போக்குவரத்து சபை காரியாலயத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த 8 இலட்சத்து ஐம்பது ஆயிரத்திற்கும் அதிகமான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவமானது, இன்று வெள்ளிக்கிழமை(06) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.
நுவரெலியா – கல்வே கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் என்ற 85 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
கொலை செய்யப்பட்ட நேரத்தில் மூன்று பேர் பாதுகாப்பு கடமையில் இருந்துள்ள நிலையில், இவர்கள் நித்திரையிலிருந்த போது உள் நுழைந்த அடையாளம் தெரியாத சிலர் குறித்த முதியவரை கொலை செய்துள்ளனர்.
அதன் பின்னர் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான் பார்வையிட்டதன் பின்னர் விசாரணைகள் மேற்கொண்டு சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நுவரெலியா இ.போ.ச டிப்போவில் வியாழக்கிழமை(05) பிற்பகல் ஓடிய பேருந்துகளின்
வருமானம் வங்கியில் வைப்பிலிடுவதற்காக அலுமாரியில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அந்த
டிப்போவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்- க.கிஷாந்தன்