அரசாங்கத்தினால் வழங்கப்படும் 25,000 ரூபா கொடுப்பனவானது, பாதிக்கப்பட்ட மக்களில் 69.56% சதவீதமானோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் உதவிச் செயலாளர் ஜயதிஸ்ஸ முனசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
பாதிக்கப்பட்ட 642,375 வீடுகளில், கொடுப்பனவு வழங்கப்பட வேண்டிய தகுதியான வீடுகளாக 469,457 வீடுகள் கணக்கிடப்பட்டுள்ளன.
வீடுகளுக்கு கொடுப்பனவு
இவற்றில் 299,513 வீடுகளுக்கு இதுவரை கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.

இன்று காலை நிலவரப்படி இன்னும் 169,944 வீடுகளுக்கு கொடுப்பனவு வழங்கப்பட வேண்டியுள்ளது. இதற்காக அரசாங்கம் 7.487 பில்லியன் ரூபா செலவிட்டுள்ளது.
உடனடி நிவாரணங்களுக்காக அரசாங்கம் இதுவரை 4,197 மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளது.
விநியோகிக்க நடவடிக்கை
பெருளமளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உதவிகள் கிடைத்து வருகின்றன. அவை தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் நேரடி ஒருங்கிணைப்புடன் விநியோகிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்ட உணவு, உபகரணங்கள், மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் விடுவிக்கப்பட்ட பின்னர், ஒருகொடவத்தை களஞ்சியசாலையிலிருந்து தேவைக்கேற்ப மாவட்ட செயலாளர்கள் ஊடாக அந்தந்த மாவட்டங்களிலுள்ள பிரதேச செயலாளர்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த உதவிகள் அனைத்தும் முறையான பொறிமுறையின் ஊடாக விநியோகிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

