Courtesy: Sivaa Mayuri
இலங்கையின் 10ஆவது நாடாளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவர், சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தனது இரண்டு தசாப்த கால நாடாளுமன்ற அனுபவத்தின் நுண்ணறிவுகளை அங்கு பகிர்ந்துக்கொண்டார்.
பாரம்பரியமாக புதிய நாடாளுமன்றம் ஆரம்பிக்கப்படும் போது, நடத்தப்படும் புதிதாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நோக்குநிலை நிகழ்ச்சி இன்று 25 ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்தில் ஆரம்பமானது.
வழிகாட்டுதல் நிகழ்ச்சி
2024 நவம்பர் 25 முதல் 27ஆம் திகதி வரை, குழு அறை எண். 01ல் முற்பகல் 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இந்த மூன்று நாள் நிகழ்ச்சியின்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களின்; பங்கு மற்றும் பொறுப்புகள், நாடாளுமன்ற சிறப்புரிமைகள், நாடாளுமன்றத்தில் சட்டமியற்றும் செயல்முறை, நாடாளுமன்றக் குழு அமைப்பு, நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் மற்றும் அரசியலமைப்பின் விதிகள் குறித்து உறுப்பினர்களுக்கு கற்பிக்கப்படுகின்றன.
இலத்திரனியல் வாக்குப்பதிவு
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலத்திரனியல் வாக்குப்பதிவு முறையை பயன்படுத்தி வாக்களிப்பதற்கான நடைமுறை அமர்வையும் நடத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மேலும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் மூலம் நிறுவப்பட்ட இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழு தொடர்பான சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் மற்றும் பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சின் நாடாளுமன்ற விவகாரப் பிரிவின் பங்கு குறித்தும், உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.